பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

269

“சேந்தா! கதவு மூடியிருக்கவேண்டிய அவசியம் இனி மேல் இல்லை. கதவைத் திறந்துவிடு.”

மகாமண்டலேசுவரரின் ஆணைப்படி மூடிப்பூட்டிய கதவுகளைச் சேந்தன் அவசர அவசரமாகத் திறந்து விட்டான்.

“மகாராணி! இதோ நம்மைச் சுற்றி நிற்கும் இவர்கள் ஒவ்வொருக்கும் பொறுப்பைப் பேசி ஒப்படைத்து அனுப்பிவிட்டு நான் மறுபடியும் இங்கே வருகிறேன். குமார பாண்டியரைப் பற்றி அப்போது நாம் பேசலாம்.”

வானவன்மாதேவி மகாமண்டலேசுவரருடைய பேச்சைக் கேட்டுத் தலையசைத்தார். உணர்ச்சியும், விருப்பமும் நம்பிக்கையின் மலர்ச்சியும் இல்லாத வெற்றுத் தலையசைப்பாக அது இருந்தது.

அங்கிருந்தவர்களில் மகாராணியாரைத் தவிர மற்றவர்கள் பின்தொடர அரண்மனையில் தாம் தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்குப் புறப்பட்டார் மகாமண்டலேசுவரர். தயங்கித் தயங்கிப் பின் தொடரும் ஆட்களோடு அவர் அங்கிருந்து வெளியேறி நடந்து சென்ற காட்சி நிமிர்ந்த பார்வையும் இராஜ கம்பீரமும் பொருந்திய வயதான கிழட்டுச் சிங்கமொன்று சில இளம் புலிகள் பின்தொடர அவற்றை எங்கோ அடக்கி அழைத்துச் செல்லுவது போலிருந்தது.

அத்தப்புரத்திலும், கன்னிமாடத்திலும் இருந்த அரண்மனைப் பெண்கள் கூட்டமாகப் பல கணித் துவாரங்களின் வழியாகவும், மேல்மாடங்களில் நின்று கொண்டும் இந்தக் காட்சியை வேடிக்கை பார்த்தனர். விடிந்ததும் விடியாததுமாக மகாமண்டலேசுவரர், தளபதி முதலிய பெரிய பெரிய ஆட்களெல்லாம் அந்தப்புரத்துக்குத் தேடிவந்து அவசரமாக மகாராணியைச் சந்தித்துவிட்டுத் திரும்பவேண்டுமென்றால் விஷயம் ஏதோ பெரியதாகத்தான் இருக்கவேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றியது. தளபதியின் தங்கை பகவதியும் அதங்கோட்டாசிரியரின் மகள் விலாசினியும்கூட அந்தக் காட்சியைப் பரபரப்புடன் பார்த்தார்கள்.