பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270

பாண்டிமாதேவி / முதல் பாகம்

இவர்களுக்கு ஏற்பட்ட பரபரப்பைப்போல் அல்லாமல் முன்பே சில இரகசியங்கள் தெரிந்திருந்த காரணத்தால் வண்ணமகள் புவனமோகினிக்கு அதிகமான பரபரப்பும், பீதியும் ஏற்பட்டிருந்தன. தமையன் அரண்மனையிலிருந்து எங்கேயாவது வெளியேறிச் சென்று விடுவதற்குமுன் அவனை ஒருமுறை சந்திக்கவேண்டும்போல் இருந்தது தளபதியின் தங்கை பகவதிக்கு.

இப்படியாக, அதிகாலையில் அந்தப்புரத்தில் மகாராணியின் தனி மாளிகையில் நடந்த கூட்டத்தில், என்ன பேச்சுக்கள் நடந்தன? என்ற செய்தி எங்கும் பரவாவிடினும், ஒரு பரபரப்பும் மர்மமான பீதியும் அரண்மனையில் பரவிவிட்டிருந்தன. முக்கியமானவர்கள், முக்கிய மில்லாதவர்கள், காவல் வீரர்கள், சாதாரணப் பெண்கள் எல்லாரும் அரண்மனைக்குள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளும்போது இதைப் பற்றியே பேசிக் கொண்டார்கள். காதும் காதும் வைத்தாற்போல் வாய்களும், காதுகளும் இந்தச் செய்தியைப் பரப்பி விட்டன.

எல்லோரையும் அழைத்துக்கொண்டு விருந்து மாளிகைக்குச் சென்ற இடையாற்று மங்கலம் நம்பி இரண்டொரு நாழிகைக்குப்பின் ஒவ்வொருவரையும் ஒரோர் காரியத்துக்காக வெளியே அனுப்பினார். மகா மண்டலேசுவரருடைய ஆணை பெற்று அந்த மாளிகையிலிருந்து வெளியேறிய ஒவ்வோர் முகத்திலும் ஒவ்வொரு விதமான உணர்ச்சியின் சாயல் பதிந்திருந்தது. சிரிப்பு, சீற்றம், கடமை, பணிவு-இன்னும் அவர்கள் அனுப்பப்பட்ட நோக்கங்களும், சென்ற திசைகளும் போலவே அவர்களுடைய நெஞ்சத்து எண்ணங்களும் ஒன்றுக்கொன்று வேறுபட்டனவாக இருந்தன.

மகாமண்டலேசுவரருடைய கட்டளைப்படி எல்லோரும் அவரவர்கள் அனுப்பிய இடத்துக்கு உடனே புறப்பட்டு விட்டனர். ஆனால் தளபதி வல்லாளதேவன் மட்டும் உடனே புறப்படவில்லை. மகாமண்டலேசுவரர் தன்னை அனுப்பிய வேலை அவசரமாயினும் அவசரமாக அவன் கிளம்பவில்லை. அந்தப் புரத்திலிருந்த தன் தங்கை பகவதியையும், அரண்மனையில் மறைந்திருந்த ஆபத்துதவிகள் தலைவனையும் அந்தரங்கமாகச் சந்தித்து ஏதோ பேசியபின்பே அவன் கிளம்பினான்.