பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

274

பாண்டிமாதேவி / முதல் பாகம்

பசுமையை, நீர்ப்பரப்பை அல்லது மலைத்தொடரைப் பார்த்துக்கொண்டு இருந்தால் அவை மனத்தைப் புதுமையாக்கி அனுப்பிவிடுகின்றன. பித்துப் பிடித்தாற்போல் கன்னிமாடத்து வாசலில் அமர்ந்திருந்த குழல்மொழி எழுந்திருந்து வெளியே நடந்தாள். மாளிகையைச் சுற்றியிருந்த தோட்டங்களில், மலர் வனங்களில், மண்டபங்களில், ஆற்றங்கரையில், இன்னும் எங்கெங்கோ தன் மன நிம்மதியைத் தேடி உலாவினாள் அவள். அகத்தின் நிம்மதி புறத்தில் கிடைப்பதற்குப் பதிலாக ஒவ்வோர் இடமும் ஒவ்வொரு நினைவை உண்டாக்கிக் கொண்டிருந்தது.

வசந்த மண்டபம் கண்களில் தென்பட்டபோது அவர் அங்கே தங்கியிருந்தது நினைவுக்கு வந்தது. நீராழி மண்டபத்தினருகே அவள் சென்றபோது அவர் அங்கே நீராடியதை நினைத்தாள். நந்தவனத்தில் நுழைந்து மலர்களைப் பார்த்த போது அவருடைய வழிபாட்டுக்காக மலர் கொய்ததை நினைத்துக் கொண்டாள். வசந்த மண்டபத்து மலர்ச்சோலை வழிகளில் அவரோடு விளையாட்டுத்தனமாகப் பேசிக் கொண்ட பேச்சுக்களையெல்லாம் எண்ணினாள்.

நண்பகலின் உச்சி வெயில் மேலேறிக் காயும் வரையில் அப்படியே தன் நினைவின்றித் திரிந்து கொண்டிருந்தாள் அந்தப் பேதைப் பெண். இனிமையான, நல்ல கனவு ஒன்றைக் கண்டுகொண்டிருந்தபோது யாரோ முரட்டுத்தனமாக அடித்துத் தட்டி எழுப்பிக் கலைத்துவிட்டது போன்றிருந்தது அவளுடைய நிலை.

அதற்குமேல் பணிப்பெண்கள் வந்து வற்புறுத்தி அழைத்துச் சென்று நீராடச் செய்தனர். உணவு கொள்ளச் செய்தனர். தன் விருப்பமின்றி அவர்களுடைய வற்புறுத்தலுக்காக அவள் நீராடினாள் உண்டாள். வீரர்களும் மெய் காவற் பணிபுரிவோரும் அரசுரிமைப் பொருள்கள் களவு போய்விட்டனவே என்று கலங்கிப்போய்ச் செய்வதறியாது திகைத்திருந்தனர். அவளோ உள்ளம் களவு போய்விட்டதே என்று உன்மத்தம் பிடித்தவள் போலிருந்தாள்.

நீண்ட பகல் நேரம் எப்படியோ சிறிது சிறிதாகக் கழிந்தது. பால் வாய்ப் பிறைப்பிள்ளையை இடுப்பில் எடுத்துக்கொண்டு