பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

275

பகல் என்னும் கணவனைப் பறிகொடுத்த மேற்றிசைப் பெண் புலம்பும் மாலை நேரம் வந்தது. இருள் ஒளியைச் சிறிது சிறிதாக விழுங்கத் தொடங்கியிருந்தது. முதல் நாளிரவு நடந்துவிட்ட கொள்ளையால் அரண்டு போயிருந்த காவல் வீரர்கள் அன்றும் பயந்துபோய் ஏராளமான காவல் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். மாளிகையின் எல்லாப் பகுதிகளிலும் வசந்த மண்டபம் உட்படச் சிறிதும் இருளின்றித் தீபங்களை எரிய விட்டிருந்தார்கள். பொழுது விடிகிறவரை அவற்றை எவரும் அணைக்கக்கூடாதென்று முன் எச்சரிக்கை செய்யப் பட்டிருந்தது.

மாளிகையின் நான்குபுறமும் பறளியாற்றங்கரையை ஒட்டினாற்போல் சுற்றிலும் ஆயுதபாணிகளாக வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டார்கள். வழக்கமான மாளிகைப் படகைத் தவிர புதிய படகுகளோ, ஆட்களோ அனுமதிக்கப்படக் கூடாதென்று கடுமையாக உத்தரவிடப்பட்டிருந்தது.

களவு போனபின் மறுநாள் செய்யப்படும் அந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்த்தபோது குழல்மொழிக்குச் சிரிப்புத்தான் வந்தது. காவலுக்கு ஆட்கள் நிறுத்தி வைக்கப்படாத இடங்கள் பறளியாற்று நீர்ப்பரப்பும், கரைமேலிருந்த உயரமான மரங்களின் உச்சிகளும்தான். கரையோரமாக இரண்டு மூன்று பாக தூரத்துக்கு ஒருவராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல் வீரர்கள் வெளிச்சத்துக்காகப் பிடித்துக் கொண்டிருந்த தீப்பந்தங்கள் தீவைச் சுற்றிக் கரை நெடுகக் கார்த்திகைச் சோதி எடுத்ததுபோல் துரப் பார்வைக்குத் தோன்றியது. வீரர்கள் ஒருவருக்கொருவர் எச்சரிக்கை செய்து கொள்ளுகிற பாராக் குரலோசை இரவின் அமைதியில் அலை அலையாகப் பரவி எதிரொலித்தது.

உறக்கம் வராத குழல்மொழி கன்னிமாடத்து முகப்பில் அமர்ந்து இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள். காலை அரும்பி பகலெல்லாம் நினைவாகி மாலை மலர்ந்தன. நோய் அவள் துயிலைக் கெடுத்து உட்காரச் செய்திருந்தது. உட்கார்ந்திருந்ததும் வீண் போகவில்லை. சற்று நேரத்துக் கெல்லாம் ஒரு பணிப் பெண் ஓடிவந்து நாராயணன் சேந்தனும், அம்பலவன் வேளானும் தங்களைப் பார்ப்பதற்காக