பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

283

அடியோரத்தில் நெருப்பு நிறத்தில் சிவப்புச் சரிகை மினுமினுப்பதுபோல் சூரியன் உதயமாகியது.

இளவரசன் இராசசிம்மனின் கையிலிருந்து பொன்னிற வலம்புரிச் சங்கு அடிவானத்து ஒளியை வாங்கி உமிழ்ந்து வண்ணம் காட்டியது. ஆட்டமின்றி மெல்ல நகர்ந்து கொண்டிருக்கும் கப்பலின் தளத்தில் நின்று கொண்டு அந்த அழகைச் சுவைப்பதற்கு ஆசையாக இருந்தது அவனுக்கு.

அந்தச் சங்குதான் அவன் மனதுக்கு எவ்வளவு நினைவு களைக் கொடுத்து உதவுகிறது? அதன் நிறத்தை மட்டும் பிரித்து நினைத்தால் அவனுக்கு மதிவதனியின் நிறம் நினைவுக்கு வருகிறது. அதில் பதிந்துள்ள முத்துக்கள் அவள் சிரிப்பு. பவழங்கள் அவள் இதழ்கள். சங்கு வளைந்து திருகும் இடத்திலுள்ள சுழிப்பு அவள் சிரிக்கும்போது கன்னத்தில் விழும் சுழிப்பு. அதன் கூம்பிய தோற்றம் அவள் கைகள் செலுத்திய வணக்கம். அந்தச் சங்கை ஏந்தி நிற்கும் அவன் உள்ளங் கைகளுக்கு அவளையே ஏந்திக் கொண்டிருப்பதாக ஓர் இனிய பிரமை.

கரையிலிருந்து யாரோ கைதட்டிக் கூப்பிடும் ஒலி மங்கலாகக் கேட்டது. சங்கை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்த இராசசிம்மன் நிமிர்ந்து திரும்பிப் பார்த்தான். தீவின் கரையிலிருந்து மணல் திட்டு ஒன்றில் மதிவதனி இரண்டு கைகளையும் உயர்த்திக் கொண்டு நின்றாள். அவள் தெரிந்தாள். அவளுடைய சொற்கள் அவனுக்குக் கேட்கவில்லை. அவள் தனக்கு விடை கொடுக்க வந்ததைத் தான் கண்டுகொண்டதை எந்தக் குரலால், எந்த அடையாளத்தால் அவளுக்குத் தெரிவிப்பதென்று தெரியாமல் தயங்கினான் இராசசிம்மன். கப்பல் நகர நகர அவள் உருவம் சிறிது சிறிதாக மங்கியது.

அதேபோல் அவன் உருவமும் அவள் கண்களுக்கு மங்கியிருக்கும். அவன் உயிரைக் காப்பாற்றி உதவிய அந்தப் பேதைப் பெண் தன் நெஞ்சின் அன்பையெல்லாம் திரட்டிக் கொண்டுவந்து அவனுக்கு விடை கொடுக்கிறாள். அதை, ஏற்றுக்கொண்ட நன்றியை அவன் எப்படித் தெரிவிப்பது?