பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

284

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்

வார்த்தைகளில் கூறினால் அந்த ஒலி அவள் செவிகளை அடைவதற்கு முன் கடல் காற்று வாரிக்கொண்டு போய் விடும்! அவளைப்போல் கைகளை ஆட்டித் தெரிவிக்கலா மென்றால் அதைப் பார்த்து, “திரும்பிப் போ!” என்று அவனைத் துரத்துவதாக அவள் தப்பர்த்தம் செய்துகொள்வாளோ என்ற பயம் உண்டாயிற்று அவனுக்கு.

குமார பாண்டியன் இப்படிக் குழம்பிக் கொண்டிருந்த போது அவன் கையிலிருந்த வலம்புரிச் சங்கு அவனுக்குச் சமய சஞ்சீவியாகக் பயன்பட்டது. அதன் ஊதுவாயில் தன் இதழ்களைப் பொருத்தி, மூச்சை அடக்கிப் பலங் கொண்ட மட்டும் ஊதினான். அந்தச் சங்கொலி கரையை எட்டியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அவனை நினைத்து நெஞ்சின் ஆழம்வரை வற்றிக்கொண்டிருக்கும் ஒரு பேதைப் பெண்ணின் உள்ளக் கடலை அந்தச் சங்கொலி பரிபூர்ணமாக நிறைத்துப் பொங்கச் செய்திருக்கும் என்பதிலும் ஐயமில்லை.

கப்பல் வெகு தூரம் வந்து செம்பவழத் தீவின் தோற்றம் மங்கி மறைந்தபின்னும், நான் இன்னும் பலமுறை இந்தத் தீவுக்கு வரவேண்டும். எந்த வகையிலோ நான் தள்ள முடியாத, தவிர்க்க முடியாத ஒரு கவர்ச்சி என்னை இந்தத் தீவுக்கு மறுபடியும் வரவேண்டுமென்று நினைக்கச் செய்கிறது என்று எண்ணிப் பெருமூச்சுவிட்டான் குமாரபாண்டியன். “இளவரசே வெய்யில் அதிகமாகுமுன் கீழ்த் தளத்துக்குப் போய் விடலாம், வாருங்கள்” என்றார் சக்கசேனாபதி.

(முதல் பாகம் முற்றிற்று)