பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இரண்டாம் பாகம்

1. பொருநைப் புனலாட்டு விழா

அன்றைக்குக் காலையில் பொதிய மலைக்குக் கிழக்கே கரவந்தபுரக் கோட்டத்தில் பொழுது புலரும்போது கதிரவனுக்கு அடக்கமுடியாத ஆவல் உண்டாகியிருக்க வேண்டும். வைகறையில் வழக்கத்தைவிடச் சற்று முன்பாகவே உதயம் ஆகிவிட்டது போலிருந்தது.

சில நாட்களாக இடைவிடாத மழை பொதியமலையின் எழிலார்ந்த நீலக் கொடுமுடிகளைக் காண முடியாதபடி எப்போதும் கருமேகங்கள் திரையிட்டுக் கவிந்திருந்தன. ஆவேசம் பிடித்து ஒடும் பேய்கொண்ட பெண்களைப் போல் ஆறுகளெல்லாம் கரைமீறிப் பொங்கி ஓடிக்கொண்டிருந்தன. சந்தனமும், செந்தமிழும், மந்தமாருதமும் எந்தப் பொதிய மலையில் பிறந்தனவோ அதே பொதிய மலையில்தான் பொருநையும் பிறந்தாள். அருவிகளாக விழுந்து காட்டாறுகளாக ஒடி மலையை விட்டுத் தரையில் இறங்கும் வரை பிறந்த வீட்டில் சுதந்திரமாக இருக்கும் கன்னிப்பெண் போலிருந்தாள் அவள். தரையில் இறங்கிய பின்போ, புக்ககம் செல்லும் மணப்பெண்ணின் அடக்கமும், ஒரே நெறியை நோக்கி நடக்கும் பண்பும் அவளுக்கு வந்துவிட்டன. கணவன் வீடாகிய கடலை அடைவதற்குமுன் அவள்தான் இரு கரையிலும் எத்தனை காட்சிகளைக் காணப் போகிறாள்? விண் முகட்டை நெருடும் கோபுரங்கள், மண்ணில் புதையும் குடிசைகள், பெரிய மரங்கள், சிறிய நாணற்புதர்கள், அழுக்கு நிறைந்த மனிதர்கள், இன்னும் எத்தனை எத்தனையோ? போகிற வழியில், குற்றாலத்து மலை முகட்டிலிருந்து குதித்துக் குறும் பலாவை நனைத்துவரும் சித்திராநதித் தோழி பொருநையைத் தழுவிக் கொள்கிறாள். பொருநைக்குப் போகும் வழிக்குத் துணை கிடைத்துவிடுகிறது.