பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

295

தயாராயில்லை. அவர்களுடைய கூடாரங்களிலெல்லாம் விளக்கொளி இரவைப் பகலாக்கியது. பூக்களின் நறுமணமும் அகிற்புகையின் வாசனையும், யாழிசையும், நாட்டியக் கணிகையரின் பாதச் சிலம்பொலியும், மனத்தை முறுக்கேற்றித் துள்ள வைக்கும் பாடல்களும் காற்று வழியாகக் கலந்து வந்து கொண்டிருந்தது. எங்கும், எதற்காகவும் தங்கள் சுகபோகங்களைக் குறைத்துக்கொள்ளாத அளவுக்கு வளமும் வசதியும் உள்ள துறையில் பணிபுரிவோரும் வசிக்கும் மற்றோர் பகுதி இருளில் மூழ்கியிருந்தது. இவை தவிர முத்துக்குளி விழாவைக் காணவந்து, மறுநாள் காலை ஊருக்குத் திரும்பிக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் அன்றிரவு அங்கேயே தங்கிவிட்ட மக்களும் இருந்தனர். அவர்களும் கூடாரங்கள் அமைத்தே தங்கியிருந்தனர்.

அந்த மாதிரிச் சாதாரண மனிதர்கள் தங்கியிருந்த கூடாரங்கள் ஒன்றிலிருந்து நமக்கு முன்பே பழக்கமானவர்களின் பேச்சுக் கேட்கிறது. ஒன்று அடங்கிய ஆண் குரல், மற்றொன்று துடுக்குத்தனம் நிறைந்த பெண் குரல். யார் இவர்கள்?’ என்று அருகில் நெருங்கிப்.பார்த்ததும் வியப்படைகிறோம்.

அந்த ஆடம்பரமற்ற எளிமையான சிறிய கூடாரத்தின் உட்புறம் அகல் விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் நமக்கு முன்பே பழக்கமான முன் சிறை அறக்கோட்டத்து மணியக்காரன் அண்டராதித்த வைணவனையும், அவன் மனைவி கோதையையும் காண்கின்றோம். அந்த வேடிக்கைத் தம்பதிகள் வழக்கம்போல் உலகத்தையே மறந்து, நகைச்சுவை உரையாடலில் மூழ்கியிருக்கின்றனர்.

“உன்னுடைய ஆவல் நிறைவேறிவிட்டதா? முத்துக்குளி விழாப் பார்க்கவேண்மென்று மூன்று ஆண்டுகளாக உயிரை வாங்கிக்கொண்டிருந்தாய். கொண்டுவந்து காண்பித்தாகி விட்டது, இனி நான் நிம்மதியாயிருக்கலாம்.”

“அதுதான் இல்லை; நாளைக் காலையில் நாம் இங்கிருந்து புறப்பட்டுவிடுவதற்கு முன்னால் நீங்கள் எனக்கு ஒரு முத்து மாலையை வாங்கித் தரவேண்டும். இவ்வளவு பிரமாதமான முத்துக்களெல்லாம் விளைகின்ற கொற்கைக்கு வந்துவிட்டு