பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்

வெறுங்கையோடு போவது நன்றாயிருக்காது!" கோதை இதைக் கூறிவிட்டு மெதுவாக நகைத்தாள்.

“அதெல்லாம் மூச்சுவிடக்கூடாது. பொழுது விடிந்ததும் ஊருக்குக் கிளம்பிவிட வேண்டும். இரண்டு பேருமே இங்கு வந்துவிட்டோம். அறக்கோட்டத்தில் ஆள் இல்லை, நாட்டு நிலைமையும் பலவிதமாகக் கலவரமுற்றிருக்கிறது.”

“முத்துமாலை வாங்கிக்கொள்ளாமல் ஓர் அடிகூட இங்கிருந்து நான் நகரமாட்டேன். முத்து விளையும் கொற்கைக்குவந்துவிட்டு முத்து வாங்காமற்போனால் மிகவும் பாவமாம்?”

“அடடே! அப்படிக்கூட ஒரு சாஸ்திரம் இருக்கிறதா? எனக்கு இதுவரையில் தெரியாதே?”

கோதை அண்டராதித்தனுக்கு, முகத்தைக் கோணிக் கொண்டு அழகு காட்டிவிட்டுச் சிரித்தாள்.

“பெண்னே! நீ சிரிக்கிறாய், அழகு காட்டுகிறாய், முத்து மாலை வாங்கிக்கொடு, வைரமாலை வாங்கிக்கொடு என்று பிடிவாதம் செய்கிறாய். நான் ஓர் ஏழை மணியக்காரன் என்பதை நீ மறந்துவிட்டாய் போலிருக்கிறது.”

“ஆகா! இந்தப் பசப்பு வார்த்தைகளுக்கு ஒன்றும் குறைவில்லை. உங்கள் உடன் பிறந்த தம்பி இந்த நாட்டு மகா மண்டலேசுவரருக்கு வலது கை போன்றவர். அவர் மனம் வைத்தால் எதை எதையோ செய்ய முடிகிறது. உங்களை இந்த அறக்கோட்டத்து மணியக்காரர் பதவியிலிருந்து வேறு பதவிக்கு உயர்த்த மட்டும் அவருக்கு மனம் வரவில்லை.”

“அவன் என்ன செய்வான்? அவனுக்கு எத்தனையோ அரசாங்கக் கவலைகள். அவனுக்கு இருக்கிற நேரத்தில் அவன் மகாமண்டலேசுவரருக்கு நல்ல பிள்ளையானால் போதும்.”

"விநாடிக்கு ஒருதரம் தம்பியின் பெயரைச் சொல்லிப் பெருமை அடித்துக்கொள்வதில் ஒன்றும் குறைவில்லை.”

“இதற்காக அதை நான் விட்டுவிட் முடியுமா, கோதை” அவள் கையைப் பற்றிக் கெஞ்சும் பாவனையில்