பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

பாண்டிமாதேவி / முதல் பாகம்


தளபதியின் மனம் நடுங்கியது. “ஐயோ! மகாராணியின் மேல் வேல் எறியப்பட்டு விட்டதா? தளபதி அருகிலிருந்தும் இப்படி நடந்து விட்டதென்று உலகம் பழிக்குமே! இது என்ன? போதாத காலமோ?” என்று பதறினான். மேல் தளத்திலிருந்து வேல் எறிந்து விட்டுக் கடலில் குதித்தவனுக்கும் இந்தச் சிவப்புத் தலைப்பாகை ஒற்றர்களுக்கும் ஏதாவது தொடர்பிருக்குமோ ? என்று அவனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. உடனே தன் கையில் கிடைத்த ஒலையோடும் ஒற்றனோடும் அங்கிருந்து இறங்கிக் கோவிலுக்கு விரைந்தான். “இந்த ஒற்றனைப் பாதுகாத்து வைத்திருங்கள். தப்பிவிடாமல் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்” என்று கூறி, பரிவாரத்து வீரர்களிடம் தன் கையில் பிடிபட்ட ஒற்றனை ஒப்படைத்துவிட்டு, திருமுக ஒலையோடு மகாராணியைப் பார்க்க விரைந்து உள்ளே சென்றான்.

மேலே இருந்து விதானத் துவாரத்தின் வழியே விசி எறியப்பட்ட வேலினால் மகாராணியாருக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படவில்லை என்று அறிந்துகொண்ட பின்பு தான் தளபதிக்கு நிம் தியாக மூச்சு வந்தது. கோவிலின் கர்ப்பக்கிருகத்துக்கு முன்னால் இருந்த மணி மண்டபத்தில் மகாராணி வானவன் மாதேவி, பவழக்கனி வாயர், அதங்கோட்டாசிரியர், தன்னுடைய தங்கை பகவதி, ஆசிரியர் மகள் விலாசினி ஆகியோர் வீற்றிருக்கும்போது தளபதி வல்லாளதேவன் அங்கே பிரவேசித்தான். “மகாராணி! நான் கேள்விப்பட்டது மெய்தானா? யாரோ வஞ்சகன் வேலை எறிந்துவிட்டு ஓடினான் என்றார்களே? இதென்ன கொடுமை? ஆலயத்துக்குள் தெய்வ தரிசனத்துக்காக நுழையும்போது கூடவா அரசியல் சூழ்ச்சிகள் இத்தகைய பயங்கர நிகழ்ச்சியின்போது மகாராணியாரின் அருகிலிருக்க இயலாமற் போனதற்கு அடியேனை மன்னிக்கவேண்டும். தீய சக்திகள் தென்பரண்டி நாட்டை வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன. சற்று முன் அடியேன் கடற்கரைப் பாறையில் பின் தங்கி நின்றதன் காரணம் இங்கு ஒருவருக்கும் புரிந்திருக்காது.