பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

302

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்

பாதுகாப்புக்காக மேலும் கவலை எடுத்துக் கொண்டான் அந்தக் கோட்டையின் சிற்றரசன். மகாமண்டலேசுவரரிடமிருந்தும் மகாராணியிடமிருந்தும் மறுமொழி கிடைப்பதற்கு முன்னால் தன்னால் ஆனவற்றையெல்லாம் தயங்காமல், மயங்காமல் செய்யவேண்டுமென்ற துடிதுடிப்பு அவனுக்கு இருந்தது.

அன்று மாலைக்குள் மானகவசன் மறுமொழி ஒலையோடு திரும்பிவிடுவான் என்று அவன் ஒவ்வொரு விநாடியும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் மானகவசன் அன்று மாலை மட்டுமல்ல, மறுநாள் காலை வரையில் வரவே இல்லை. வேறு சில செய்திகள் பராபரியாக அவனுக்குத் தெரிந்தன.

கன்னியாகுமரிக் கோவிலில் யாரோ மகாராணியார்மேல் வேல் எறிந்து கொல்ல முயன்ற செய்தியைக் கேட்டபோதே அவன் மிகவும் கலங்கினான். அதன்பின் கூற்றத் தலைவர்கள் அரண்மனையில் ஒன்று கூடித் தென்பாண்டி நாட்டின் எதிர்காலம் பற்றி விவாதிக்கப் போவதும் அவனுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், “இடையாற்றுமங்கலம் மாளிகையில் அந்நியர்அடிச்சுவடு படமுடியாத பாதுகாப்பான இடத்திலிருந்து பாண்டிய மரபின் சுந்தரமுடியும், வீரவாளும், பொற் சிம்மாசனமும் கொள்ளை போய்விட்டன”— என்ற புதுச்செய்தியை அறிந்தபோது அவன் அடைந்த அதிர்ச்சி அவன் வாழ்நாளிலேயே பேரதிர்ச்சி.

‘அடாடா வலிமையான தலைமையற்றிருக்கும் இந்த நாட்டுக்குத்தான் ஒரே சமயத்தில் எத்தனை சோதனைகள்? பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும் என்பது போல் அடுத்தடுத்து வரும் இந்தத் துன்பங்களையெல்லாம் மகாராணியார் எப்படித்தான் தாங்கிக்கொள்ளப் போகிறாரோ? கணவனை இழந்த கைம்மை நிலை, குமாரபாண்டியர் காணாமற்போன துயரம்! பகைவர்களின் பலம் வாய்ந்த தொல்லைகள், அரசுரிமைப் பொருள்கள் கொள்ளைபோன அவலம், ஐயோ இந்தச் சமயத்திலா நான் போர்ச் செய்தியைப் பற்றிய திருமுகத்தைக் கொடுத்தனுப்ப வேண்டும் ? இதை வேறு கேள்விப்பட்டால் அவர்கள் மனம் எவ்வளவு வேதனைப்படும்? தெய்வத்துக்குச் சமமான மகாராணியாரின் நெஞ்சம்