பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

303

இந்நாட்டையும், தம் புதல்வனையும், எதிர்கால ஆட்சியையும் பற்றி எத்தனை எத்தனை உயர்ந்த எண்ணங்களை எண்ணிக் கொண்டிருக்கின்றது? ஐயோ! ஊழ்வினையே! எங்கள் மகாராணி பாண்டிமாதேவியின் எண்ணங்களுக்கு நீ என்ன முடிவு வகுத்து வைத்திருக்கிறாயோ?”

இவ்வாறு எண்ணி நெடுமூச்செறிந்த பெரும்பெயர்ச் சாத்தனின் மனக்கண்களுக்கு முன்னால் ஒரு கணம் பாண்டிமாதேவியின் சாந்தம் தவழும் தெய்வீக முகமண்டலம் தோன்றி மறைந்தது. ஏனோ, மகாராணி பாண்டிமாதேவியின் திருமுகம் தோன்றிய மறுகணமே அதை ஒட்டித் தோன்றினாற்போல் மணத்தை நுகர்ந்த அளவில் பூவின் உருவை மனம் உரு வெளியில் கற்பித்துக் காண முயலுமே, அப்படிப்பட்ட ஒர் இயல்பு அது.

பெரும்பெயர்ச்சாத்தன் அவன் தந்தையைப் போலவே அஞ்சா நெஞ்சம் படைத்த வீரன். அவன் தந்தை உக்கிரன் மகாமன்னரான பராந்தக பாண்டியரையே பல முறைகள் எதிர்த்துப் போரிட்டு அதன் பின்பே அவருக்குப் பணிந்து நண்பனானான். அத்தகைய திடமான வீரப்பரம்பரையில் பிறந்திருந்தும் நல்லவர்களுக்கு வரும் துன்பங்களைக் காணும் போது அவன் மனம் நெகிழ்ந்துவிடுகிறது.

ஒருபுறம் நாட்டின் சூழ்நிலைகளைப்பற்றிய தவிப்பு. மறுபுறம் தூதுபோன மானகவசன் இன்னும் ஏன் திரும்பி வரவில்லை என்ற கவலை. இரண்டும் பெரும் பெயர்ச்சாத்தனைப் பற்றிக்கொண்டு அவன் அமைதியைக் குலைத்தன.

எதற்கும் இன்னொரு தூதனை அனுப்பிவிட்டால் நல்லது. காரியம்பெரிது, மெத்தனமாக இருந்து விடக்கூடாது. மானகவசன் போய்ச்சேர்ந்தானோ, போகவில்லையோ’ என்று நினைத்துப் பார்க்குங்கால் பற்பல விதமான ஐயப்பாடுகள் அவனுக்கு உண்டாயின. உடனே மற்றொரு தூதனிடம் கொற்கையில் நடந்த குழப்பம், வடஎல்லையில் கொழுக்குத்துக் கற்கள் உடைப்பட்ட விவரம் எல்லா வற்றையும் விவரித்த மற்றொரு திருமுகத்தை எழுதிக்கொடுத்து அனுப்பினான்.