பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

311

இந்த மாதிரி நாநலம் படைத்தவர்கள் உலகில் அத்தி பூத்தாற்போலத்தான் அகப்படுவார்கள். வாழ்க்கையில் அவநம்பிக்கை ஏற்படும்படி பேசி விட்டுச் செல்பவர்களே பெரும்பாலோர்,

பேச்சைப் பொறுத்தமட்டில் மகாராணிக்கு எடை போட்டுப்பார்த்த அனுபவம் உண்டு. இடையாற்றுமங்கலம் நம்பி பேசிவிட்டுப் போனால் கேட்டுக்கொண்டிருந்தவர் மனத்தில் அவரை எண்ணிப் பிரமிக்கும்படி செய்துவிட்டுப் போவார். தளபதி வல்லாளதேவன் வெடிப்பாகப் பேசி உணர்ச்சியூட்டுவான். அதங்கோட்டாசிரியர், பவழக்கனிவாயர் போன்ற பண்டிதர்கள் காரண காரிய ரீதியாக அழுத்தம்படப் பேசுவர். நாராயணன் சேந்தன் குதர்க்கமும் சிரிப்பும் உண்டாக்குவான்.

ஆனால் கோட்டாற்றுச் சமணத் துறவியின்பேச்சு இவற்றோடு மாறுபட்டது. வாடும் பயிருக்குப் பருவமறிந்து பெய்து தழைக்கச்செய்யும் மழைபோன்றது அது. சில துயரமான நேரங்களில் மகாராணியே சிவிகையை அனுப்பி அவரை வரவழைப்பதுண்டு. சமீபத்தில் சிறிது காலமாக அந்தத் துறவி யாத்திரை போயிருந்ததால் அரண்மனைப் பக்கம் வரவில்லை. இரண்டு மூன்று நாட்களுக்குமுன் அவர் திரும்பி வந்திருப்பதாகக் கூறினார்கள். நிம்மதியற்ற அந்தச் சூழ்நிலையில் அந்தத் துறவியை வரவழைத்துப் பேசினால் மனத் தெளிவு ஏற்படுமென்று அவருக்குத் தோன்றியது. உடனே சிவிகையை எடுத்துப் போய் அவரையும் முடிந்தால் மற்றொருவரையும் அழைத்துவருவாறு ஆட்களை அனுப்பினார். சில நாழிகைகளில் அவர் வந்து சேரும்வரை தனிமையும், கவலைகளும் மகாராணியாரின் மனத்தை வாட்டி எடுத்து விட்டன. இரண்டு துறவிகளுமே வந்திருந்தார்கள். ஒளி தவழும் தூய முகமும், முண்டிதமாக்கபட்டு வழுவழுவென்று மின்னும் தலையுமாக அருளொளி கனியும் அந்தத் துறவிகளின் தோற்றத்தைப் பார்த்தபோதே நிம்மதி வந்துவிட்டது போலிருந்தது. மகாராணி எதிர்கொண்டு எழுந்து சென்று வணங்கி அவர்களை வரவேற்றார். ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டு