பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

312

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்

தன் யாத்திரை அனுபவங்களைச் சிறிது நேரம் கூறினார்கள் அவர்கள் இருவரும். அந்தச் சமயத்தில் அதங்கோட்டாசிரியரும், பவழக்கனிவாயரும் வேறு அங்கு வந்து சேர்ந்தார்கள். சரியான அவை கூடி விட்டது!’ என்று நினைத்து மனநிறைவு பெற்றார் மகாராணி! ‘சுவாமி! கவலைகளை உணர்ந்து கொண்டு கலங்கும் இயல்பு முதன் முதலாக எப்போது மனித மனத்துக்கு உண்டாயிற்று’ என்று ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டுக் குணவீர பண்டிதருடைய முகத்தை நிமிர்ந்து பார்த்தார் மகாராணி.

குணவீர பண்டிதர் தம்மோடு வந்திருந்த கமல வாகனரைப் பார்த்துச் சிரித்தார். பின்பு கூறினார்.

“இன்பங்களை உணர்ந்து மகிழும் இயல்பு ஏற்பட்ட போது!”

மகாராணி இதற்குப் பதில் சொல்வதற்குள் அதங்கோட்டாசிரியரும், பவழக்கனிவாயரும் குறுக்குக் கேள்வி கேட்டார்கள். பேச்சு அவர்கள் நால்வ்ருக்குள்ளேயே விவாதம் போலச் சுழன்றது. மகாராணி அதன் நயத்தை விலகியிருந்து அனுபவிக்கலானார்.

"சமணர்கள் எப்போதுமே நிலையாமையைத்தான் வற்புறுத்துவார்கள்”—அதங்கோட்டாசிரியர்பிரான் இடையிலே குறுக்கிட்டார்.

“நிலையாமை ஒன்றே நிலைப்பது, நிலைப்பதாகத் தோன்றுவதெல்லாம் நிலையாதது, என்று தானே சமணர்களின் நூல்கள் எல்லாம் கூறுகின்றன?” என்றார் பவழக்கனிவாயர்.

"நீங்கள் எங்களுடைய கொள்கையைத் திரித்துக் கூறுகிறீர்கள். நிலையாமையைக் குறித்து எல்லாச் சமயங்களுமே உடன்படுகின்றன. எங்கள் நூல்கள் உண்மையை ஒளிக்காமல் சொல்லும்போது கசப்பாக இருக்கிறது. திருக்குறளும் நிலையாமையைச் சொல்கிறது, எங்கள் சமயத்தார் எழுதிய நாலடியாரும் நிலையாமையைச் சொல்லுகிறது. திருக்குறள், ‘வாழ்க்கை நிலையாதது; செல்வம் நிலையாதது; இளமை நிலையாதது; ஆனாலும் வாழ்ந்து பார். மனைவி மக்களோடு அறம் பிறழாமல் வாழு. புகழ் எய்து என்று நம்பிக்கையூட்டுகிறது.