பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

318

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்

கடினமாகிக்கொண்டிருந்தது. ஏதாவது ஒரு பாழ்மண்டபம் வழியில் அகப்பட்டால்கூடப் பிரயாணத்தைத் தற்காலிகமாக நிறுத்திக்கொண்டு தங்கிவிடலாமென்று அவனுக்குத் தோன்றியது. பெருமழைக் காலங்களில் இடி அதிகமாக இருக்கும்போது காட்டு மரங்களின் கீழே தங்குவது நல்லதல்லவே என்ற அச்சமும் அவனுக்கு இருந்தது.

அந்தச் சமயத்தில் சமய சஞ்சீவி போல் சாலையோர்த்தில் ஒரு பாழ்மண்டபம் தெரிந்தது. அதில் காட்டுச் சுள்ளிகளால் நெருப்பு மூட்டிக் குளிர்காய்ந்து கொண்டிருந்தார்கள் சிலர். அந்த வெளிச்சம் இல்லையானால் அப்போதிருந்த இருட்டில் அந்த மண்டபம் அங்கிருப்பதோ, அதில் ஆட்கள் உட்கார்ந்திருப்பதோ அவன் கட்புலனுக்குத் தெரிந்திருக்கவே முடியாது.

அவ்வளவு மழையோசையிலும் அவனுடைய குதிரைக் குளம்பொலி அவர்களுக்குக் கேட்டிருக்கவேண்டும். எல்லோரும் சாலைப்பக்கமாகத் திரும்பிப்பார்த்ததை மானகவசன் கண்டான். குதிரை நனையாமல் மண்டபத்தின் முன் புறத் தூணில் கட்டிவிட்டு, உடைகளைப் பிழிந்துவிட்டுக் கொண்டான். உடல் தெப்பமாக நனைந்திருந்தது. மகாமண்டலேசுவரரின் திருமுக ஒலை இடுப்புக்குள் பத்திரமாக இருந்தது. “அந்தக் காலத்தில் இந்தப் பாழ்மண்டபத்தைக் கட்டிய வள்ளல் யாரென்று தெரிந்தால் இப்போது அவனுக்கு நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு நல்ல நினைவு மண்டபமே கட்டி வைத்துவிடலாம்” என்று சிரிப்புடன் சொல்லிக்கொண்டே அவர்களுக்குப் பக்கத்தில் தானும் போய்க் குளிர் காய்வதற்கு உட்கார்ந்தான் மானகவசன். அவன் சிரிப்போ, பேச்சோ அவர்களிடையே பதில் சிரிப்புக்களையோ, பேச்சுக்களையோ உண்டாக்கவில்லை. தங்களுக்குள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். மானகவசன் அதைப் பொருட்படுத்தா விட்டாலும் மனித இயல்பை மீறியதாக இருந்தது அவர்கள் நடந்துகொண்ட விதம். இந்த மாதிரி சமயத்தில் “நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று விசாரித்து அறிய முயல்வதுதான் சாதாரண மனித இயற்கை. அதற்குக் கூட