பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நா. பார்த்தசாரதி

319

அவர்கள் முயலவில்லை. ஆனால் மானகவசன் அவர்களைப் போல் ஊமையாக இருந்துவிடவில்லை.

“ஐயா! நீங்களெல்லாம் யார்? கொற்கை முத்துக்குளி விழா பார்த்துவிட்டுத் திரும்பி வரும்போது மழையில் அகப்பட்டுக் கொண்டீர்களா? அடடா! எதற்கு இவ்வளவு அவசரமாகத் திரும்பினர்கள்? நாளைக்குக் காலையில் சாவகாசமாகத் திரும்பியிருக்கக்கூடாதோ?” என்று அன்போடு விசாரித்தான்.

அவர்கள் இந்த விசாரிப்புக்கும் பதில் சொல்லவில்லை. தங்களுக்குள் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள். மானகவசனுக்கு முகம் சுண்டிப்போயிற்று, பேசுவதை நிறுத்திக்கொண்டான். வேற்று முகம், புது ஆட்கள் என்ற வேறுபாடின்றிப் பேசிப் பழகும் அண்டராதித்தன் தம்பதிகள் அவன் நினைவில் மறுபடியும் தோன்றினார்கள். ‘மனிதனுக்கு மனிதன் பேசிப் பழகிக்கொள்ளத்தானே மொழி உணர்ச்சிகள் எல்லாம் இருக்கின்றன? அதற்குக்கூடத் தயங்கும் சில பிரகிருதிகள் இப்படியும் இருக்கின்றனவே’— என்று எண்ணி வியந்தான்.அவன். ஒன்று அவர்கள் ஊமைகளாகயிருக்க வேண்டும். அல்லது அமிழ்தினும் இனிய தமிழ் மொழியே தெரியாதவர்களாயிருக்கவேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது.

மழையும் விடுகிறபாடாயில்லை. நேரமாகிக் கொண்டிருந்தது. அந்தப் பாழ் மண்டபத்திலேயே எல்லோரும் மூலைக்கு மூலை சுருண்டு படுத்தனர். குளிர் காய்வதற்காக மூட்டியிருந்த தீ அணைந்து மண்டபத்தில் இருள் சூழ்ந்தது. படுத்த சிறிது நேரத்துக்கெல்லாம் மானகவசன் அயர்ந்து தூங்கிவிட்டான்.

நல்ல தூக்கக்கிறக்கத்தில் யாரோ உடம்பைத் தொட்டு அமுக்குகிற மாதிரி இருந்தது. உடம்பைத் தொட்டு அமுக்கி இடுப்பைக் கட்டுவதுபோல் உணரவே துள்ளி எழுந்தான். அவனால் எழுந்திருக்க முடியவில்லை. ஏதோ சொல்ல முயன்றான், வார்த்தைகள் வரவில்லை. வாய் உளறியது. தன்னை யாரோ பலமாகப் பிடித்துக்கொண்டு, வாயையும் மூடியிருக்கிறார்கள் என்பதை உணர்ந்தான். அடுத்த கணம்