பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

320

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்

முதுகிலும், தலையிலும் பலமான அடிகள் விழுந்தன. அவனுக்குத் தன் நினைவு தவறியது. அப்படியே சுருண்டு விழுந்தான். அதன் பின்னர் பாழ்மண்டபத்தில் நடந்ததொன்றும் அவனுக்குத் தெரியாது.

பொழுது விடிந்து கதிரவன் ஒளி மேலேறிக் கதிர்கள் மண்டபத்துக்குள் விழுந்தபோது வலி பொறுக்க முடியாமல் முனகிக்கொண்டே மெல்ல எழுந்திருக்க முயன்றான் அவன். எழுந்து நடக்கமுடியவில்லை. மூட்டுக்கு மூட்டு வலித்தது. அந்த நேரத்தில் தெய்வம் அவனுக்கு ஒர் அருமையான உதவியைக் கொண்டுவந்து சேர்த்தது. இடுப்பிலிருந்த திருமுகமும் மண்டபத்துத் தூணில் கட்டியிருந்த குதிரையும் அவனிட மிருந்து பறிபோயின. கொற்கைத் திருவிழாவுக்குப் போயிருந்த அண்டராதித்தனும், கோதையும் அந்தப் பாதையாகத் திரும்பி வந்தார்கள். அவன் இறைந்து கூச்சலிட்டான்.

‘யாரைப்பற்றி நாம் அதிகம் சிந்திக்கிறோமோ, அவர்களைத் தெய்வம் நம் பக்கத்தில் துணையாகக்கொண்டு வந்து சேர்க்கின்றதென்பது எவ்வளவு பெரிய உண்மை?' என்று அவர்களை அந்தப் பாதையில் கண்டவுடனே எண்ணினான். அவன் மெய்சிலிர்த்தது. அவர்களை அங்கு கொண்டுவந்து சேர்த்த இறைவனை வாழ்த்தினான் மானகவசன்.

அந்தத் தம்பதிகள் அந்நிலையில் அவனை அங்கே கண்டு பதறிப்போனார்கள். நடந்ததையெல்லாம் அவர்களிடம் விவரமாகக் கூறினான் மானகவசன்.

“நாடு முழுவதுமே கெட்டுப் போய்க்கிடக்கிறது அப்பா! நல்லவன் வெளியில் இறங்கி நடக்கவே காலமில்லை இது!” என்று தொடங்கிக் கொற்கையில் நடந்த குழப்பத்தை அவனுக்குச் சொன்னார்கள்.

அடி, உதை பட்டது கூட அவனை வருத்தத்துக் குள்ளாக்கவில்லை. முக்கியமான அரசாங்கத் திருமுகத்தைத் திருட்டுக் கொடுத்துவிட்டோமே, என்ன ஆகுமோ—என்ன ஆகுமோ? என்று எண்ணி அஞ்சினான் அவன்.