பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

321


“பரவாயில்லை அப்பா? நீ என்ன செய்வாய், உன்னை முதலில் ஊருக்கு அழைத்துப் போக ஏற்பாடு செய்கிறேன்” என்று கோதையை அவனருகில் துணை வைத்துவிட்டுத் தான் மட்டும் பக்கத்து ஊர்வரை நடந்துபோய் ஒரு சிவிகையும் சுமக்கும் ஆட்களும் தயார் செய்துகொண்டு வந்தான் அண்டராதித்த வைணவன். சிவிகை அன்று மாலை பொழுது சாயும் நேரத்துக்கு அவனைக் கரவந்தபுரத்துக்குக் கொண்டு போய்ச் சேர்த்தது.


6. தமையனும் தங்கையும்

தென்பாண்டி நாட்டின் வீரத்தளபதி வல்லாளதேவன் இந்தக் கதையின் தொடக்கத்திலிருந்து இதுவரையில் ஒய்வில்லாமல் அலைந்துகொண்டுதான் இருந்தான். அவனுக்கும் இவன் சிந்தனைக்கும் சில நாழிகைப் பொழுதாவது அமைதி கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான். தன்னையும் தன்னுடையவற்றையும்விடத் தன் கடமைகளைப் பெரிதாகக் கருதும் அந்த உண்மை வீரனுக்கு உடன்பிறந்த தங்கையைச் சந்தித்து மனம் விட்டுச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பதற்குக் கூட இதுவரை ஒழியவில்லை.

இப்போது கூட அவனுக்கு ஒழியாதுதான். கோட்டாற்றுப் படைத் தளத்துக்குப் போய் உடனே படை ஏற்பாடுகளைக் கவனிக்குமாறு அவனுக்கு அவசரக்கட்டளை இட்டிருந்தார் மகாமண்டலேசுவரர். அவருடைய கட்டளையின் அவசரத்தை விட், அவசரமாகத் தன் தங்கை பகவதியையும் ஆபத்துதவிகள் தலைவன் குழைக்காதனையும் சந்திக்க வேண்டியிருந்தது அவனுக்கு.

வெளிப்படையாகச் சந்திக்க முடியாத சந்திப்பு அது. மறைமுகமாகப் பயந்து பயந்து செய்கிற காரியங்களே மகா மண்டலேசுவரருடைய கவனத்துக்கு எட்டி விடுகின்றன. வெளிப்படையாகச் செய்தால் தப்பமுடியுமா?