பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

326

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்

சுவர்கள் விழுந்துவிடுமோ என்று அஞ்சவேண்டிய சமயத்தில் குடிசைக்குள் மாடு கன்றுபோட்டு விடுகிறது. நிறைமாதத்தோடு பிள்ளைப் பேற்றுக்குத் தயாராயிருந்த அந்த ஏழையின் மனைவிக்கு அதே சமயத்தில் இடுப்பில் வலிகண்டது. இன்னும் சிறிது நேரத்தில் குழந்தை பிறந்துவிடுமோ என்று பரபரப்பு ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் குடிசையின் ஒரு பக்கத்து மண்சுவர் ஈரம் தாங்காமல் விழுந்துவிட்டது. அந்த வீட்டில் வேலை பார்த்து வந்த அடிமைச் சிறுவன் ஒருவன் இறந்துபோனான். வயல்கள் ஈரப்பதமாகவே இருக்கும் போதே விதை விதைத்துவிட வேண்டுமே என்று வீட்டுத் தலைவன் வயலுக்கு ஓடினான். வழியிலே அவனுக்குக் கடன் கொடுத்திருந்தவர் அவனை மறித்துக்கொண்டார். அந்தச் சமயம் பார்த்துப் பக்கத்து ஊரில் அவன் உறவினர் ஒருவர் இறந்துபோனதாக இழவு ஒலை கொண்டுவந்தான் ஒருவன். என்ன செய்வதென்றே புரியாமல் அவன் திகைத்துக் கொண்டிருந்தபோது தள்ளமுடியாத விருந்தினர்கள் இரண்டு பேர்கள் அவன் குடிசையைத் தேடிக்கொண்டு வந்தார்கள். அப்போது குடிசையின் பின்புறமிருந்து அவனுடைய மூத்த புதல்வனின் அலறல் கேட்டது. அவன் ஓடிப்போய்ப் பார்த்தான். அங்கே அவன் புதல்வனைப் பாம்பு தீண்டியிருந்தது. அவன் கோ வென்று கதறி அழுதான். அந்தச் சமயத்தில் ஊர்க்கணக்கர் வந்து அவன் நிலவரி. செலுத்தவில்லை என்பதை நினைவுபடுத்தினார். அவனுடைய குலகுருவும் அந்த நேரம் பார்த்து அங்கே வந்து 'தட்சிணையைக் கீழே வைத்துவிட்டு மறு வேலை பார்' என்று கேட்க ஆரம்பித்தார்...”

பகவதிக்குச் சிரிப்பு பொறுக்க முடியவில்லை. “ஏதோ தலைபோகிற காரியம் என்று அவசரமாகக் கூப்பிட்டுவிட்டு எதற்கு அண்ணா இந்தக் கதையெல்லாம் அளக்கிறீர்கள்?”

“கதையில்லை! தென்பாண்டி நாட்டின் இப்போதையச் சூழ்நிலை ஏறக்குறைய இதுதான். கதையில் அத்தனை துன்பங்களுக்கும் ஒரு மனிதன் இலக்கு, இங்கே ஒரு நாடு இலக்கு"