பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

331

தரையில் நடந்தன. எண்ணங்களோ கடலில் மிதந்து சென்ற அந்தக் கப்பலோடு மிதந்து சென்றன.

வீட்டுக்குப் போனதும் அவளுடைய அத்தை வேறு அவளைக் கோபித்துக் கொண்டாள். “வயதுதான் ஆகி விட்டது உனக்கு, உன் வயதுக்கு இவ்வளவு அசட்டுத் தனமும், முரட்டுத்தனமும் வேறு எந்தப் பெண்ணுக்காவது இருக்கிறதா, பார். யாரோ ஊர் பேர் தெரியாதவன் கடையில் வந்து சங்கு வாங்கிக்கொண்டு போனான் என்றால் இப்படியா அவனையே நினைத்துக் கொண்டு பைத்தியம் பிடித்துப்போய் அலைவார்கள்! கிழக்கே ஒரு மூலை விடிவதற்குள் உனக்குக் கடற்கரையில் என்ன வேலை?”

அத்தையின் சீற்றத்துக்கு முன் தலைகுனிந்து நின்றாள் மதிவதனி, கால் கட்டை விரலால் தரையைத் தேய்த்துக் கொண்டு நின்ற அவளுக்குக் கண்கள் கலங்கிவிட்டன. பக்கத்தில் நின்ற தந்தை அனுதாபத்தோடு அவளைச் சமாதானப் படுத்தினார்.

“அசடே இதற்காக வருத்தப்படலாமா? அத்தை உன் நன்மைக்காகத்தானே சொல்லுகிறாள்! எவரோ மூன்றாவது மனிதரை நினைத்து ஏங்கிக்கொண்டிருந்தால் அவர் நம்மவர் ஆகிவிடுவரா? நீதான் இப்படி நினைத்து நினைத்துக் குமைகிறாய் ! இரண்டாயிரம் பொற்கழஞ்சுகளை அலட்சியமாகத்துக்கிக்கொடுத்து ஒரு சங்கை வாங்கிக்கொண்டு போகும் செல்வச் சீமான் அந்த இளைஞன். நேற்றிரவு நீ அவன் உயிரையே காப்பாற்றியிருக்கிறாய்! ஆனாலும் என்ன? இந்தத் தீவு பார்வையிலிருந்து மறைந்ததுமே உன்னையும், என்னையும் இந்தத் தீவையும் மறந்துவிடப் போகிறான் அவன். செல்வர்களுக்கு நினைவு வைத்துக்கொள்வதற்கு நேரம் ஏது, அம்மா!”

“அப்பா! நீங்கள் நினைப்பது தவறு; அவர் என்னையும் இந்தத் தீவையும் ஒரு போதும் மறக்கமாட்டார்” என்று உடனே பதில் சொல்லிவிடத் துடித்தது அவள் நாக்கு. ஆனால் சொல்லவில்லை, தந்தையின்மேல் கோபம் கோபமாக வந்தது அவளுக்கு காற்றில் மேலும் கீழுமாக ஆடும் இரண்டு மாதுளை