பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

334

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்

வேலையாகக் கொஞ்சம் வெளியே போய்வருகிறேன்.” பெண்ணின் அழுகையையும் கோபத்தையும் தணித்து ஒரு வழியாக அவளைத் தமது கடையில் வாணிகத்தைக் கவனித்துக் கொள்வதற்கு அனுப்பிவைத்தார் அந்தப் பெரியவர்.

கடையில் போய் உட்கார்ந்த பின்பும் அவளுடைய நினைவுகள் எல்லையற்ற கடலில்தான் இருந்தன.

மதிவதனியின் சிந்தனைகள் இளவரசன் இராசசிம்மனைச் சுற்றியே வட்டமிட்டன. “இந்த நேரத்துக்கு அவருடைய கப்பல் எவ்வளவு தூரம் போய் இருக்கும்? எத்தனை தடவை அவர் என்னைப்பற்றி நினைத்துக் கொண்டிருப்பார்! எத்தனை தடவையாவது? மறந்தால்தானே பல தடவைகள் நினைக்க முடியும்? அவர்தான் என்னை மறந்திருக்கவே மாட்டாரே? அவராக நினைக்காவிட்டாலும் அந்தச் சங்கு அவர் கையிலிருந்து நினைப்பூட்டிக்கொண்டே இருக்கும்!” தும்மல் வரும்போதெல்லாம் அவர் தன்னை நினைப்பதாகக் கற்பனை செய்துகொண்டாள் அவள். அத்தையும், தந்தையும் அன்று காலை சொல்லியது போல் அவர் தன்னை உடனே மறந்துவிடுவாரென்பதை அவளால் நம்பவே முடியவில்லை! கடலுக்கு அப்பாலிருக்கும் உலகத்தை அறியாத அந்த அப்பாவிப் பெண்ணின் மனத்தில் அசைக்க முடியாததொரு நம்பிக்கையை, சிதைக்க முடியாததொரு கனவை, வேரூன்றச் செய்துவிட்டுப் போய்விட்டான் முதல்நாள் சங்கு வாங்க வந்த அந்த இளைஞன். அவன் ஒருவனுக்காகவே தன் உள்ளமும், உணர்வும் தோற்றுத் தொண்டுபடவேண்டுமென்று தன்னைக் காக்கவைத்துக் கொண்டிருந்ததுபோல் அவளுக்குத் தோன்றியது. கால ஓட்டத்தின் இறுதிப்பேருழிவரை கழிந்தாலும் அவனை மறுபடியும் அங்கே காணாமல் தன் கன்னிமை கழியாதுபோல் நினைவு குமுறிற்று. அவளுக்கு. “நீ அவனைக் காணலாம்: பன்முறை காணலாம். பிறவி, பிறவியாகத் தொடர்ந்து விலாசம் தவறாமல் வந்துகொண்டிருக்கும் உயிர்களின் வினைப் பிணிப்புப்போல் விளக்கிச் சொல்ல முடியாததோர் பிணைப்பு உங்களுக்கிடையே இருக்கலாம். இருக்க முடியும் என்பதுபோலத் தற்செயலான ஒரு தெம்பு அவள் நெஞ்சில் நிறைந்து