பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

338

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


மதிவதனி இதைக் கேட்டுத் தனக்குள் சிரித்துக் கொண்டாள். அவர்கள் பேச்சு தொடர்ந்தது.

“நம் கதைதான் இப்படி ஆயிற்றென்றால் நாம் விழிஞத்தில் இறக்கி விட்டு வந்த அந்த மூன்று தோழர்களும் என்ன செய்திருக்கிறார்களோ?”

“என்ன செய்தால் நமக்கென்ன? நாம் திரும்பிவிட வேண்டியதுதான். நமக்கு இனி வேலை இல்லை.”

வீதியின் ஆரவாரம் குறைந்து கடற்கரை தொடங்கும் திருப்பத்தில் அவர்கள் திரும்பிவிட்டனர். மதிவதனி சிறிது பின் தங்கினாள். அதுவரை தெருவில் ஆள் நடமாட்டமுள்ள கலகலப்பான பகுதியில் அவர்கள் சென்றதால் ஒட்டுக் கேட்டுக் கொண்டே பக்கத்தில் ஒட்டி நடக்க வசதியாக இருந்தது. இனி அப்படி முடியாது. ஆகவே அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்து வீட்டுக்குப் போய்விட்டாள் அவள்.

பொழுது மறையும் நேரத்துக்குத்தான் வலை விரிக்கும் பகுதியை ஒட்டியிருந்த கடற்கரைக்கு அவள் சென்றபோது கடல் திருப்பத்தில் புலிச் சின்னமும், பனைமரச் சின்னமும் உள்ள கொடி, உச்சியில் அசைய அந்தக் கப்பல் புறப்பட்டுக் கொண்டிருந்தது. அதன் மேல்தளத்தில் அவர்களுடைய சிவப்புத் தலைப்பாகைகள் தெரிந்தன.

“ஐயோ! கடலில் எங்கேயாவது அவருடைய கப்பலும் இதுவும் சந்தித்துக் கொண்டால்?” பேதமையான இந்தக் கற்பனை மதிவதனிக்குத் தோன்றியபோது அவள் உடல் நடுங்கியது. அவளுடைய கற்பனைகளோ கையில் சங்கோடு நிற்கும் அவனைச் சுற்றி அவனுடைய கப்பல் போகும் கடலில் மிதந்தன.


8. முடியாக் கனவின் முடிவினிலே...

நான்கு புறமும் திக்குத் திகாந்தரங்களெல்லாம் ஒரே நீல நெடு நீர்ப் பரப்பு. யாரோ சொல்லித் தூண்டி