பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

345


கண்ணொடு கண்ணினை கலப்புற்று நிற்கும் அவள் நாணிக் கண் புதைத்துச் சிரிக்கிறாள். வலது இதழ் முடியுமிடத்தில் சிரிப்பு சுழித்துக் குழியும் சமயத்தில் தன் கையால் குறும்புத்தனமாகக் கிள்ளுகிறான் அவன்.

பொய்க்காக வலிப்பதுபோல நடிக்கிறாள் அவள். அந்த இனிய நிலை முடிவுற்றுத் தடையற்று வளர்ந்து தொடர்பாய் நீண்டுகொண்டே போகிறது.

அப்போது இடையாற்றுமங்கலம் நம்பி ஓடிவந்து. “நீ ஓர் அசடன் ” என்று கூச்சலிடுகிறார். அவனுடைய அன்னை ஓடிவந்து, “உனக்கு இன்னும் விளையாட்டுப் புத்தி போகவில்லை” என்கிறாள். குழல்வாய்மொழி ஓடிவந்து, “நீங்கள் பொல்லாதவர்” என்று பொறாமையோடு கத்துகிறாள். சக்கசேனாபதி சிரித்துக்கொண்டே, “நீங்கள் இன்னும் குழந்தையாகவே இருக்கிறீர்களே?” என்று குற்றம் சுமத்துகிறார். அத்தனை குரல்களும் மண்டையைப் பிளப்பதுபோல் ஒன்றாகச் சேர்ந்து ஒலிக்கின்றன. அவன் பயந்து போய் மதிவதனிை இன்னும் இறுக்கித் தழுவிக்கொள்கிறான். -

“ஐயோ! இதென்ன உங்கள் உடல் இப்படி அனலாய்ச் சுடுகிறதே?” என்று பதறிப் போய்ச் சொல்கிறாள் அவள். இராசசிம்மனின் உடல் வெடவெடவென்று நடுங்குகிறது. “பெண்ணே! இந்தக் கனலைத் தீர்க்கும் மருந்து நீதான் என்று அவளைத் தழுவிய கைகளை எடுக்காமலே சொல்லுகிறான் அவன். திடீரென்று யாரோ கைகொட்டிச் சிரிக்கும் ஒலி, கடல் ஒலியோடு கலந்து கேட்கிறது. காற்றுமண்டலத்தில் நுண்ணுணர்வே உடலாகி மேலே எட்டாத உயரத்தில் பறந்து கொண்டிருந்த இராசசிம்மனின் உடல் பொத்தென்று தரையில் வந்து விழுந்ததைப்போல் ஒரு பெரிய அதிர்ச்சி. அந்த அதிர்ச்சியைத் தாங்கிக்கொண்டு அவன் மெல்லக் கண்களைத் திறக்கிறான். எதிரே கப்பல் தளத்தில் சக்கசேனாபதி அவன் அருகே சிரித்துக்கொண்டு நின்றார். தன் கைகளினால் படுக்கையின் பக்கத்தில் இருந்த வலம்புரிச் சங்கை நெரித்து விடுவதுபோல் தழுவிக் கொண்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்தான் அவன். அவர் சிரிப்பதன் காரணம் புரிந்தது.