பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

367


தோன்றிக் குழம்பிக் கொண்டிருந்தனர். கோப்பரகேசரி பராந்தக சோழன், கொடும்பாளுரான், கீழைப் பழுவூர்க் கண்டன் அமுதன், அரசூருடையான் சென்னிப் பேரரையன் - அந்த நான்கு எதிரிகள் தாம் படையெடுப்பு ஏற்பாட்டில் ஒரு முகமாக முனைந்திருப்பதாகக் கரவந்தபுரத்திலிருந்து வந்த செய்தி கூறியது. ஆனால் மகாமண்டலேசுவரருக்கு எட்டியிருந்த வேறு சில செய்திகளால் இதில் பரதூருடையான் என்னும் மற்றோர் பெருவீரனும் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரிந்தது. படைகளிலும், போர்ப் பழக்கத்திலும் வல்லவர்களான இந்த ஐந்து பேரும் ஒன்று கூடிய கூட்டணியை முறியடிப்பது எளிமையானதல்லவென்று அவரும் உணர்ந்தார். ஆகையால்தான் அந்தப் போர் விரைவில் நெருங்கி வந்துவிடாதபடி எப்படித் தடுப்பதென்ற சிந்தனையில் அவர் ஆழ்ந்து மூழ்க நேர்ந்தது. எதிரிகள் எவ்வாறு நேரடியாகப் போருக்கு வந்து விடாமல் கலவரங்களையும், குழப்பங்களையும் ஏற்படுத்திச் சூழ்ச்சி செய்திருக்கிறார்களோ அப்படி நாமும் ஏதாவது செய்தால் என்னவென்று அவருக்குத் தோன்றியது.

சிந்தித்துக்கொண்டே இருந்தவர் திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தவர்போல் அரண்மனை மெய்க்காவலர் படைத்தலைவன் சீவல்லபமாறனை அழைத்து வருமாறு ஒரு சேவகனை அனுப்பினார். அவரால் அனுப்பப்பட்ட சேவகன் சீவல்லபமாறனைக் கூப்பிட்டுக்கொண்டு வருவதற்கு அவசரமாகச் சென்றான். -

மகாமண்டலேசுவரர் குறுக்கும், நெடுக்குமாக உலாவுவது போல நடந்தார். முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும் வேறு வழி இல்லை - வாய்க்குள்ளேயே இந்தச் சொற்களை மெல்லச் சொல்லிக் கொண்டார். கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு அளவு பிசகாமல் காலடி பெயர்த்து வைத்து இவர் நடந்த நிமிர்வான நடை உள்ளத்துச் சிந்தனையின் தெளிவைக் காட்டியது.

- சீவல்லபமாறன் வந்து அடக்க ஒடுக்கமாக வணங்கி விட்டு நின்றான். மகாமண்டலேசுவரர் அவனை வரவேற்றார். “வா