பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

380

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


கூடுமிடத்தில் எங்கிருந்தோ ஒரு வண்டு பறந்து வந்து உட்கார்ந்தது. பாண்டியர் பலத்தையே அடித்து வீழ்த்துகிறவனைப்போல் கடுப்போடு அந்த வண்டை அடித்துத் தள்ளினான் கொடும்பாளுரான். “அரசே! அவசரமாக ஓர் ஒற்றன் வந்திருக்கிறான்.” என்று சோழனை விளித்துக் கூறிக்கொண்டு உள்ளே வேகமாக வந்த ஒரு வீரன் முகத்தில் போய் விழுந்தது அந்தச் செத்த வண்டு.


13. சுசீந்திரம் கைமுக்குத் தண்டனை

குணவீரபண்டிதர் வந்து உரையாடிவிட்டுப்போன மறுநாள் காலை மகாராணி வானவன் மாதேவிக்கு அரண்மனையில் இருப்புக் கொள்ளவில்லை. அரசபோக ஆடம்பரங்களின் நடுவே எல்லோரும் வணங்கத்தக்க நிலையில் இருந்தும் உள்ளத்தின் ஏதோ ஒரு பகுதி நிறையாமலே இருந்து கொண்டிருந்தது. நிறைந்த வசதிகள் நிறையாத நெஞ்சம், உயர்ந்த எதிர்கால நினைவுகள், உயராத நிகழ்காலச் சூழ்நிலை இப்படித் தவித்துக்கொண்டிருந்தது அந்தப் பேருள்ளம். அந்தத் தவிப்பை மாற்ற விலாசினியும், பகவதியும் உடன் இருந்தது எவ்வளவோ ஆறுதலாக இருந்தது. அந்த ஒரே ஆறுதலும் இப்போது இல்லை.

அன்று விடிந்ததும் வானவன்மாதேவிக்கு விலாசினி திடீரென்று தந்தையோடு ஊருக்குச் சென்றுவிட்ட செய்தி தெரிந்தது. பகவதியாவது அரண்மனையில் இருப்பாள் என்று எண்ணி அவளை அழைத்துவரச்சொல்லி வண்ணமகளை அனுப்பினார் மகாராணி, பகவதி அரண்மனை எல்லையிலேயே காணப்படவில்லை என்று அறிந்ததும் அவருக்குப் பயமும் கவலையும் உண்டாயிற்று. புவனமோகினியின் மூலம் அந்தச்செய்தியை மகாமண்ட லேசுவரருக்குச் சொல்லி அனுப்பினார்.

கோட்டாற்றுத் துறவி எழுதிக் கொடுத்துவிட்டுப்போன அந்தப் பாடலைத் திரும்பத் திரும்ப பாடச் சொல்லிக் கேட்க