பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

381


வேண்டுமென்று தோன்றியது மகாராணிக்கு. உலக வாழ்வின் அடிமூலத்துக்கும், அடிமூலமான கருத்தை அந்தப் பாட்டுக்குள் பொதிந்து வைத்திருப்பதாக அதைக் கேட்கும்போதெல்லாம் அவருக்கு ஒரு மனத்தோற்றம் உருவாயிற்று.

குமார பாண்டியனைப்பற்றி மகாமண்டலேசுவரர் வந்து கூறிய விவரங்கள் அவருக்கு மிகுந்த வேதனையைக் கொடுத்திருந்தன. மகனைப்பற்றிய கவலை, மகன் ஆளவேண்டியதாயிருந்தும் அவனால் ஆளப்படாமல் இருக்கிற நாட்டைப்பற்றிய கவலை, மலர் போன்ற உள்ளம் கொண்ட மகாராணிக்கு இத்தனை கவலைகளையும் சற்றே மறந்து புனிதமான சிந்தனைகளில் ஈடுபட அந்தப் பாடல் உதவி செய்தது. விலாசினியாவது, பகவதியாவது உடனிருந்தால் மனம்விட்டுப் பேசிக்கொண்டிருக்கலாம். அல்லது ஆடல் பாடல்களில் சுவையான அனுபவத்தில் தன்னை மறக்கலாம், அவர்களும் அரண்மனையில் இல்லை? மகாமண்டலேசுவரர் அந்தப்புரப் பகுதிக்குள் அதிகம் வருவதில்லை! அன்று குமார பாண்டியனைப் பற்றிய உண்மை நிலைகளை அவர் வந்து தனிமையில் கூறிய போதே, மகாராணிக்குத் தாங்கமுடியாத துயரம் அழுகையாகப் பொங்கிக்கொண்டு வந்தது. வீணாக அடிக்கடி மகாராணியாரைச் சந்திக்கச் சென்று எதையாவது கூறி அவர் மனத்தை உணர்ச்சி நெகிழுமாறு புண்படுத்தக் கூடாதென்றுதான் அரண்மனைக்குள்ளேயே இருந்தும் அதிகமாக மகாராணியைக் காணாமல் இருந்தார் மகாமண்டலேசுவரர். கோட்டாற்றுப் பண்டிதரையும் நினைத்தபோதெல்லாம் வரவழைத்து அவர் பெருமை குறையும்படியாக நடந்து கொள்ள முடியாது.

சொன்னதைக் கேட்கவும், கேட்டதைக் கொடுக்கவும் எத்தனை பணிப் பெண்களோ இருந்தார்கள்? யார் இருந்தால்தால் என்ன ? யார் போனால் என்ன ? நாட்டுக்கெல்லாம் அரசி கூட்டுக்குள் கிளியாக உள்ளம் குலையவேண்டியிருந்தது. மண்ணின் உலகத்தில் பாண்டி