பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

390

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


கொள்ளாமல் மூன்றாவது மனிதர் தற்செயலாக அனுதாபப் படுவதுபோல் பேசினார் மகாராணி.

அந்தச் சோழிய நங்கை விக்கலும், விசும்பலுமாக வெடித்து கொண்டு வரும் அழுகையோடு சீறினாள்;

“இவ்வளவு ஆறுதல் சொல்கிறீர்களே! உங்களுக்கு ஒரு மகன் இருந்து அவனும் இம்மாதிரித் திருடிக்கொண்டு ஓடி அகப்பட்டுவிட்டால் அவன் கைமுக்குத் தண்டனை அடைவதைக் கண்டு உங்களால் பொறுமையாக இருந்துவிட முடியுமா ? பெரிய ஒளவை மூதாட்டியைப் போல் கூப்பிட்டுவிட்டு இருந்த இடத்திலிருந்து கொண்டே எனக்கு அறிவுரை சொல்ல வந்து விட்டீர்களே!. யார் நீங்கள்? உங்களுக்கென்ன அக்கறை இதில்?”

“அம்மா! நானும் உன்னைப்போல் ஒரு தாய். எனக்கும் ஒரு மகன் இருக்கிறான்!” மகாராணி ஒவ்வொரு சொல்லாக நிறுத்திப் பதில் கூறினாள். வானவன்மாதேவியின் உள்ளத்தில் பேரிடியைப் பாய்ச்சியிருந்தாள் அந்தச் சோழிய நங்கை'உனக்கும் ஒரு மகன் இருந்து அவனும் இப்படித் திருடிக்கொண்டு ஓடி அகப்பட்டிருந்தால்- சரியாகக் கேட்டிருந்தாள் அவள். ஆம்! எனக்கும் மகன் இருக்கிறான். அவனும் ஒருவிதத்தில் திருடியிருக்கிறான்! மகாராணி மனத்துக்குள் சொல்லிக் கொண்டார். அவருடைய மனம் வலித்தது, மிகவும் வலித்தது.


14. தாயாகி வந்த தவம்

திருவாட்டாற்றிலிருந்து சுசீந்திரத்துக்கு வந்திருந்த அந்தத் தாய் தன் சொற்களால் மகாராணியின் உள்ளத்தில் ஓங்கி அறைந்து விட்டிருந்தாள். எழுத்தாகிச் சொல்லாகி ஒலியாகிப் பொருள்பட்டுப் புரிந்த வெறும் சொற்களா அவை? ஒரு தாயுள்ளத்தின் கொதிப்பு, பெற்றவளின் பீடு அன்னையின் ஆணவம்-அவளுடைய வார்த்தைகளில் சீறிக் குமுறின.