பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


ஒரு மகா காவியத்தை எழுதியதால் கவிஞனுக்கும், எவ்வளவு பெருமை உண்டோ, அதைவிட அதிகமான பெருமை ஒரு மகனைப் பெற்றதால் தாய்க்கு உண்டு. ஆனால் அந்தப் பெருமையை நாம் அடைவதற்கு நாம் பெற்ற பிள்ளைகளும் தகுதி உள்ளவர்களாக நடந்து கொள்ளவேண்டாமா?”

மகாராணியின் கேள்விக்கு அந்தப் பெண்ணால் பதில் சொல்ல முடியவில்லை. கோபத்தால் அவளுடைய உதடுகள் துடித்தன. பளிங்குக் கண்ணாடியில் முத்துக்கள் உருள்வதைப் போல் அவளுடைய கன்னங்களில் கண்ணிர்த் துளிகள் உருண்டன. மகாராணி உரிமையையும், பாசத்தையும் தாமாகவே உண்டாக்கிக்கொண்டு நடுங்கும் கையால் அந்தப் பெண்ணின் கண்ணிரைத் துடைத்துவிட்டுச் சொன்னார்:

“உன் அழுகை என் நெஞ்சை வருத்துகிறது. அம்மா நீ அழாதே. தாயாக வாழ்வதே பெண்ணுக்கு ஒரு தவம். அந்தத் தவத்தில் சுகபோக ஆடம்பர இன்பங்களுக்கு இடமே இல்லை. பெறுவதற்கு முன்னும் துன்பம்! பெறும்போதும் துன்பம், பெற்ற பின்னும் துன்பம். ஒரே துன்பம்-ஒயாத துன்பம்! அந்தத் துன்பம்தான் தாய்மை என்கிற தவம்! எந்தப் பொருள்களின் மேல் அதிகமாகப் பற்றும், பாசமும் இருக்கிறதோ, அந்தப் பொருளைக்கூட இழக்கத் துணிவதுதான் தவம்!”

அந்தத் தாய் மகாராணியின் தோளில் சாய்ந்து முகத்தைப் புதைத்துக்கொண்டு விம்மி விம்மி அழுதாள். பதவியும், பொறுப்பும் பெருமையுமாகச் சேர்ந்துகொண்டு எந்த ஓர் அழுகையைத் தான் அழ முடியாமல் தடைப்படுத்தி வைத்திருக்கின்றனவோ, அந்த அழுகையை-மகனுக்காகத் தாய் அழும் அழுகையை-அந்தப் பெண் தம்முன் அழுதுகொண்டிருப்பதை மகாராணி இரு கண்களாலும் நன்றாகக் கண்டார்.

இந்த ஏழைச் சோழியப் பெண்ணும் ஒரு தாய், நானும் ஒரு தாய். இவள் ஏழையாயிருப்பதன் பெரிய நன்மை துன்பம் வந்தால் மனம் விட்டு அழ முடிகிறது. நான் மகாராணியாயிருப்பதனால் அப்படி அழக்கூடச் சுதந்திர