பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/444

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

442

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


பல்லக்குத் தூக்கிகள், வண்ணமகள், கோதை அண்ட ராதித்தன்-அத்தனை பேருக்கும் ஒரே திகைப்பு. பிடிவாதமாக அந்தச் சோறுதான் வேண்டுமென்று மகாராணி வற்புறுத்திக் கேட்டு வாங்கிச் சாப்பிடும்போது எப்படித் தடுக்கமுடியும்?

எல்லோரும் இரக்கமும், பரிதாபமும் ததும்பும் விழிகளால் இலையை ஒரு கையால் ஏந்தி மற்றொரு கையால் உண்ணும் அந்தப் பேரரசியை இமையாமல் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

“ஏன் இப்படிப் பார்க்கிறீர்கள்? பாற்சோறு உண்கிறவள் பழைய சோறு உண்கிறேனே என்று தானே வியக்கிறீர்கள்? பாற்சோறானால் என்ன ? பழைய சோறானால் என்ன? பார்த்தால் இரண்டும் ஒரே நிறந்தான்!”-சிரித்துக்கொண்டே அவர்களுக்குச் சொன்னார் மகாராணி.

“எதையும் இழக்கத் துணிகிற மனம் வேண்டும்” என்று காந்தளூர் மணியம்பலத்தில் மகாராணி தனக்குத் தானே சொல்லிக்கொண்ட வாக்கியம் புவனமோகினிக்கு இப்போது நினைவு வந்தது.

சிறிது நேரம் அறக்கோட்டத்தில் இருந்து விட்டு, இரவே பயணத்தை மீண்டும் தொடங்கி அரண்மனைக்குப் போய் விட்டார்கள் அவர்கள்.


21. சதி உருவாகிறது

கொடும்பாளுர் அரச மாளிகையின் ஒரு புறத்தே தனியாக அமர்ந்து, பல செய்திகளையும் பேசியபின் வடதிசையரசர்கள் வாளை உருவி நீட்டிச் சூளுரை செய்து கொண்டிருந்த சமயத்தில் அந்த வீரன் வந்து அப்படிக் கூறியது பரபரப்பை உண்டாக்கிவிட்டது.

“அரசே! அவசரமாக ஓர் ஒற்றன் தேடிக்கொண்டு வந்திருக்கிறான். அவனை இங்கே அனுப்பலாமா?” என்று சோழனிடம் மட்டும்தான் கேட்டுத் தெரிந்துகொண்டு போக