பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/452

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22. கொற்றவைக் கூத்து

அதோ அவர்களே வந்துவிட்டார்கள் என்று அரசூருடையான் வாயில் பக்கமாகத் தன் கையைச் சுட்டிக்காட்டிய போது மற்ற நான்கு பேருடைய எட்டுக் கண்களும் தணிக்க இயலாத ஆர்வத் துடிதுடிப்போடு விரைந்து நோக்கின. நான்கு முகங்களின் எட்டு விழிகள் ஒருமித்துப் பாய்ந்த அந்தத் திசையிலிருந்து வந்து கொண்டிருந்தவர்கள் சோர்ந்து தளர்ந்து தென்பட்டனர். பார்த்தவர்களது உற்சாகமும், ஆவலும் பார்க்கப்பட்டவர்களிடம் காணோம். அவர்களுடைய முகத்தில் களை இல்லை, கண்களில் ஒளி இல்லை, பார்வையில் மிடுக்கு இல்லை, நடையில் உற்சாகமில்லை. பயந்து நடுங்கிக்கொண்டே வருவது போல் தோன்றியது அவர்கள் வந்தவிதம். வந்தவர்கள் வேறு யாரும் இல்லை. முன்பு நாகைப்பட்டினத்திலிருந்து அனுப்பப்பட்ட ஆறு ஒற்றர்களில், தெற்கே குமாரபாண்டியனைக் கொல்வதற்காக ஈழத்துக்குச் சென்ற மூன்று பேர்தான் வந்துகொண்டிருந்தார்கள். மெல்லத் தயங்கி வந்து நின்ற அவர்கள் அங்கே வீற்றிருந்த வடதிசையரசர்களுக்கு வணக்கம் செலுத்திவிட்டுத் தலைகுனிந்தனர். தென்திசைப் படையெடுப்பைப் பற்றிய முக்கிய ஆலோசனையில் இருந்த அந்த ஐவரின் முகத்தையும் நேருக்கு நேர் பார்ப்பதற்குத் தெம்பில்லாதவர்கள்போல் நடந்துகொண்டனர் வந்தவர்கள்.

“எப்பொழுது வந்தீர்கள்?” என்று சோழன் அவர்களை நோக்கிக் கேட்டான்.

“நாகைப்பட்டினத்தில் வந்து இறங்கியதும் நேரே இங்கு தான் புறப்பட்டு வருகிறோம். நாங்கள் வந்தால் அங்கிருந்து உடனே கொடும்பாளுருக்கு வரச் சொல்லிக் கட்டளை என்று துறைமுகத்தில் காத்திருந்தவர்கள் கூறினார்கள். அதன்படி வந்துவிட்டோம்” என்று அந்த மூவரில் ஒருவன் பதில் கூறினான்.