பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

பாண்டிமாதேவி / முதல் பாகம்


மனத்தில் ஒருவகை வேதனையை உண்டாக்கிற்று. அங்கே மகிழ்ச்சியும், கலகலப்பும் நிலவுவதற்காக ஏதாவது ஒரு மாறுதலை உடனே உண்டாக்க வேண்டும் என்று நினைத்தார்.

“மகாராணி! என் குமாரி விலாசினிக்குப் பரத நாட்டியம் முழுதும் கற்பித்திருக்கிறேன். அபிநயமும் நிருத்தியமும் அவளுக்கு அழகாகப் பொருந்தியிருக்கின்றன. திருவாசகம் திருக்கோவையாரிலுள்ள மாணிக்கவாசகரின் அற்புதமான பாடல்களுக்கெல்லாம் அபிநயப் பயிற்சி அளித்திருக்கிறேன். இப்போது எல்லோரும் ஓய்வாக உட்கார்ந்திருக்கிறோம். மகாராணியாரின் நிம்மதியற்ற குழம்பிய மனத்துக்கும் ஆறுதலாக இருக்கும்” என்று மெதுவாகப் பேச்சைத் தொடங்கினார். அதங்கோட்டாசிரியர்.

“மிகவும் நல்லது! உங்கள் பெண்ணின் நாட்டியத்தைப் பார்த்தாவது என் மனக்கவலைகளைச் சிறிது நேரத்துக்கு மறக்க முயல்கிறேன்” என்று கூறினார் மகாராணி. “குழந்தாய், விலாசினி! உனக்கு நடனமாடத் தெரியுமென்று நீ என்னிடம் சொல்லவே இல்லையே? வா இப்படி! ஏதாவதொரு நல்ல பாட்டுக்கு அபிநயம் பிடித்துக் காட்டு, பார்க்கலாம்” என்று ஆசிரியரின் மகளிடம் திரும்பிக் கூறினார். விலாசினி சிரித்துக் கொண்டே எழுந்திருந்தாள். நிலா முற்றத்துச் சுவரோரமாக மறைவில் சென்று உடையை நாட்டியத்துக்கு ஏற்றபடி வரிந்து கச்சும், தாருமாகக் கட்டிக்கொண்டு வந்தாள்.

“வல்லாளனின் தங்கைக்கு நன்றாகப் பாட வரும் என்று நினைக்கிறேன். அவளே பாடட்டும்” என்று பவழக்கனிவாயர் சும்மா இருந்த பகவதியையும் அதில் சேர்த்து வைத்தார்.

“பழம் நழுவிப் பாலில் விழுந்தாற்போல் ஆயிற்று! இந்த இரண்டு இளம் பெண்களுமாகச் சேர்ந்து நமக்குச் கலைவிருந்து அளிக்கட்டும்.”

“மகாராணியாரே பார்த்து ஆசிமொழி கூறுவதற்கு முன் வந்திருக்கிற போது எங்கள் கலைக்கு அதைவிடப் பெரும் பேறு வேறென்ன இருக்கமுடியும்?” என்றாள் சிலம்பு குலுங்க நாட்டிய உடையோடு வந்து நின்ற விலாசினி. பகவதி