பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/460

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

458

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


கொண்டு போய் உட்கார்த்தினான். கொற்றவைக் கூத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கம் கோவில் போலத் தூய்மையாகப் புனிதப்பொருள்கள் நிறைந்திருந்தது. தீபச் சுடர்கள் பூத்திருந்தன. தூபக் கலசங்கள் கொடி படரச் செய்தன. எல்லோரும் பயபக்தியோடு அரங்கில் வீற்றிருந்தனர். மத்தளம் கொட்ட, வரிசங்கம் ஊத, அரங்கின் எழினி திரைச்சீலை மெல்ல விலகியது. ஆ அதென்ன தோற்றம்: புவனகோடியைப் போக்குவரவென்னும் கவன ஊஞ்சலிட்டு ஆட்டும் கெளரியே அங்கு நிற்கிறாளா? தேவராட்டி மும்முகச் சூலம் ஏந்திய கோலத்தோடு அரங்கில் வந்து நின்றாள்.


23. திரிசூலம் சுழன்றது

சகல புவனங்களையும் ஆட்டுவிக்கும் தேவதேவனைத் தன் இரு விழிகளால் ஆட்டி வைத்த உமையே சின்னஞ்சிறு கன்னிப் பெண்ணாய் உருக்கொண்டு, கூத்துடை தரித்து வந்து நிற்பதுபோல் வலக்கையில் திரிசூலதாரியாய்க் கம்பீரமாக அரங்கில் காட்சியளித்தாள் தேவர்ாட்டி. அவள் கொடும்பாளூர் அரசவையில் ஆடல் மகளாய்ப் பணி புரியும் ஒரு சாதாரண மானிடப் பெண்தான் என்ற உணர்வு அரங்கில் கூடியிருந்த அரசர்களுக்கு ஏற்படவே இல்லை. இமையா விழிகளால் அரங்கின் மேற் சென்ற பார்வையை மீட்க மனமின்றி வீற்றிருந்தனர். அழகொழுக எழுதிய நிருத்திய உயிரோவியமாய்த் தோன்றிய அவள் கூத்தைத் தொடங்குவதற்கு முன்பே அவர்கள் மனங்களை வென்றுவிட்டாள்.

தேவராட்டியின் தோற்றத்தைப் பற்றி இங்கே சிறிது கூற வேண்டும். மறக்குலத்துப் பெண்கள் அணிந்து கொள்வது போல் முழங்காலுக்கு மேல் கச்சம் வைத்துக் கட்டிய புடவை. பாதங்களுக்கு மேல் இரண்டு பாம்புகள் சுருண்டு கிடப்பது போல் பாடகங்கள் (ஒரு வகைச் சிலம்பு இல்லையோ உண்டோவெனத் திகழ்ந்த இடையில் மேகலை போல் இறுகப் பிணித்த புலித்தோல், கழுத்திலும், தோளிலும் முன் கைகளிலும் பல நிறப் பூமாலைகள்