பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/470

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

468

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்

சிரிப்பைக் காணவேண்டும். உன் வாயில் கலகலப்பு நிறைந்த பழைய குறும்புப் பேச்சைக் கேட்கவேண்டும். உன் நடையில் பழையதுள்ளலைக் காணவேண்டும். இன்றே இந்தக் கணமே நீ பழைய மதிவதனியாக மாறிவிடு. கடைக்குப்போ பழைய சுறுசுறுப்போடு விற்பனையைக் கவனி. அண்ணனுக்கு மகள், மகன் இரண்டாகவும் இருப்பவள் நீ ஒருத்திதான். இப்படிச் சோக நாடகம் நடித்து அண்ணனையும் என்னையும் வேதனைப்படுத்தாதே,”– அத்தை தன் உள்ளத்தின் உணர்ச்சிகளாகயிருந்த ஆத்திரம், வேதனை, ஆவல் எல்லாவற்றையும் அடக்க முடியாமல், அந்தப் பெண்ணின் முன்பு கொட்டித் தீர்த்து விட்டாள். அத்தையின் பேச்சுக்கு மதிவதனியிடமிருந்து பதில் வரவில்லை. முழங்காலைக் குத்தவைத்து அதன்மேல் முகத்தைப் புதைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள் அவள், மெல்லிய விசும்பல் ஒலி அத்தையின் செவிகளில் விழுந்தது.

“என்னடி, பெண்ணே? இதற்காகவா அழுகிறாய்? அழுகை வரும்படி நான் என்ன சொல்லிவிட்டேன் இப்போது?” என்று கேட்டுக்கொண்டே கீழே குனிந்து அவள் முகத்தை நிமிர்த்தினாள் அத்தை. அவளுடைய விழிகள் கண்ணிர்க் குளங்களாக மாறியிருந்தன. கண்களில் அரும்பிய கண்ணிர் அரும்புகள் செடிகளில் அரும்பி மலர்ந்த மலர்களில் உதிர்ந்தன.

“யாராவது இதற்காக அழுவார்களா? கோவிலுக்குக் கொண்டு போகவேண்டிய மலர்களின் தூய்மை கெடும்படி யாக இப்படி இவற்றின்மேல் கண்ணிரைச் சிந்துகிறாயே! நீ செய்கிற காரியம் உனக்கே நன்றாயிருந்தால் சரிதான்” என்று கடிந்துகொண்டே அவள் கூந்தலைக் கோதிவிட்டுச் சரி செய்தாள் அத்தை.

அந்தச் சமயத்தில் வெளியே சென்றிருந்த மதிவதனியின் தந்தை வீட்டுக்குள் நுழைந்தார்.

“மதிவதனி, எதற்காக அம்மா இப்படி உன் அத்தையிடம் அழுது முரண்டு பிடித்துக்கொண்டிருக்கிறாய்?” என்று அவர் கேட்டார்.