பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/474

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

472

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


சிலைகளுக்கும் பூவணிந்துவிட்டு அத்தை கண்களை மூடித் தியானித்துக்கொண்டு நின்றபோது, மெல்ல வெளிப் பக்கமாக நழுவிப் புன்னை மரத்தடி மணற்பரப்புக்கு வந்தாள் அவள். அத்தை திரும்பி வந்து பார்த்துவிடப் போகிறாளே என்ற பயமும், வெட்கமும் பதற்றத்தை உண்டாக்கின. அவசரம் அவசரமாக அத்தை வரும் வழியை மிரண்டு திரும்பிப் பார்த்துக்கொண்டே மணற்பரப்பில் கிழக்கு நோக்கி உட்கார்ந்தாள். கண்களை மூடினாள். பளபளப்பான இமைத் தோல்களின் கரும் பசுமைச் சிறு நரம்புகள் மூடிய கண்களின் அழகைக் காட்டின. வலது கை விரல்கள் பயத்தால் நடுங்கின. உடல் வியர்த்தது. நெஞ்சு ஆவலால் வேகமாக அடித்துக்கொண்டது. வலது கை ஆள் காட்டி விரலால் வட்டத்தை மணலில் கீறிவிட்டுக் கண்களை ஆசையோடு திறந்து பார்த்தாள். என்ன ஆச்சரியம்? ஆரம்பித்த நுனியோடு கோடு சரியாகப் போய்ப் பொருந்தி வட்டம் ஒழுங்காக முடிந்திருந்தது. அந்த வட்டத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தன் அன்புக்குரியவன் அன்று கப்பல் மேல் தளத்திலிருந்து ஊதிய சங்கின் ஒலி மறுபடியும் கேட்டதுபோல் ஒரு பிரமை ஏற்பட்டது அவளுக்கு. கூடல் கூடியதால் உண்டான குதுாகலத்தால் மதிவதனி அதையே பார்த்துப் பூரித்துக் கொண்டிருந்தபோது பின்னால் யாரோ சிரிக்கும் ஒலி கேட்டது. திரும்பிப் பார்த்தாள். அவளுடைய அத்தை நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு வெட்கம் தாங்க முடியவில்லை.


25. கடற் காய்ச்சல்

சக்கசேனாபதி பதறிப்போனார். நடுக்கடலில் குமார பாண்டியனுக்கு அப்படி ஒரு நிலை ஏற்படுமென்று அவர் எதிர்பார்க்கவில்லை. சிலருடைய உடல் இயல்புக்குத் தொடர்ந்தாற் போல் கடலில் பயணம் செய்வது ஒத்துக் கொள்ளாது. இராசசிம்மனுக்குக் கடற்காய்ச்சல் வருவதற்கான அறிகுறிகள் இருந்ததை முன் கூட்டியே அவர் உணர்ந்து