பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/491

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

489


கொள்ளும் பார்வையும், உரு வெளியில் பெரிதாகத் தோன்றி அவன் சிறுமையை அவனுக்கு நினைவுபடுத்தின. தென்பாண்டி நாட்டின் எத்தனையோ ஆயிரம் வீரர்களுக்கு வாய் கட்டளையிடும் அவனை, வாய் திறவாமல் கண் பார்வையாலேயே நிற்கவும், நடக்கவும், செயலாற்றவும் ஏவுகிற அரும் பெரும் ஆற்றல் அந்த இடையாற்றுமங்கலத்து ‘மலைச்சிகரத்தினிடம் இருந்தது.

மனத்தைத் தடுக்க முயன்றாலும், முடியாமல் மறுபடியும் மறுபடியும் அவன் சிந்தனை இடையாற்றுமங்கலம் நம்பியையே சுற்றிக்கொண்டு மலைத்தது. ஆபத்துதவிகள் தலைவனைக் கூட்டிக்கொண்டு வர வாயிற்புறம் சென்றவன் கூட்டிக் கொண்டு வந்துவிட்டான்.

நெடுந்துாரம் பயணம் செய்து வந்த அலுப்பும், களைப்பும் குழைக்காதனிடம் தெரிந்தன. அலைந்து திரிந்து வந்தவன் முகத்தில் காணப்படும் ஒரு கருமை அவன் முகத்தில் பதிந்து ஒளி மங்கியிருந்தது. மேடையில் ஏறி அருகில் வந்து தளபதியை வணங்கினான் அவன். “நேரே அங்கிருந்துதான் வருகிறீர்களா? தளபதி கேட்டான். ஆம்’ என்பதற்கு அறிகுறியாகக் குழைக்காதனின் தலை அசைந்தது.அந்த இடத்தில் பொதுவாக எல்லோரும் காணும்படி நின்று கொண்டு குழைக்காதனிடம் ஒரு அந்தரங்கமான செய்தியைப் பற்றி விசாரிப்ட்து நாகரிகமற்ற செயலாகும் என்று தளபதிக்குத் தோன்றியது.

“குழைக்காதரே! கொஞ்சம் இப்படி என் பின்னால் வாருங்கள்” என்று குறிப்பாக மெதுவான குரலில் கூறிவிட்டு முரச மேடையின் பின்புறத்துப் படிகளில் இறங்கி ஆயுதச் சாலையை நோக்கி நடந்தான் வல்லாளதேவன். குழைக்காதனும் மெளனமாக அவனைப் பின்பற்றிப் படியிறங்கிச் சென்றான். அந்த இரண்டு பேர்கள் படியிறங்கி நடந்து செல்லும் திசையில் அங்கே கூடியிருந்த வீரர்களின் பல ஆயிரம் விழியிணைகளின் பார்வைகள் இலயித்துப் பதிந்தன. ஆயுதச்சாலையின் தனிமையான ஒரு மூலையில் வந்து தளபதியும் குழைக்காதனும் நின்றார்கள்.