பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/493

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாதி

491


விட்டதே என்று இந்த நெருக்கடியான நிலையிலும் எனக்குச் சிறிது மனக்குறைவு உண்டாகத்தான் செய்கிறது” என்று சொல்லிவிட்டுச் சிரித்தான் தளபதி.

"மகாசேனாதிபதி அப்படி ஒரு குறையை உணரவேண்டியது அவசியம்தான். ஏனென்றால் தங்கள் உடன்பிறந்த தங்கையார் அவ்வளவு தத்ரூபமாக ஆண் வேடத்தோடு பொருத்திக் காட்சியளிக்கிறார்கள். அவர்கள் அந்த மாறு வேடத்தோடு அன்றிரவு அரண்மனைத் தோட்டத்தில் வந்து என் முன் நின்றபோது எனக்கே அடையாளம் புரியவில்லையே? மிக அருமையாக நடிக்கிறார்கள். விழிஞத்தில் அந்தக் குறுந்தடியனுக்கும் மகாமண்டலேசுவரரின் புதல்விக்கும் முன்னால் ஆண் வேடத்தோடு தங்கள் தங்கையார் சிரித்துப் பேசிய சீரைப் பார்த்து அடியேன் அயர்ந்து போனேன்.”

“என்ன செய்யலாம்? வேடம்போட்டு நடித்துப் பிறரை ஏமாற்றி வாழ்வதெல்லாம் அறத்தின் நோக்கத்தில் பாவம்தான். சில சமயங்களில் வாழ்வதற்காகப் பொய்யாக நடிக்க வேண்டியிருக்கிறது. நடிப்பதற்காகவே வாழ்கிற வாழ்வை மகாமண்டலேசுவர்ரைப் போன்றவர்களே வைத்துக் கொண்டிருக்கிறார்களே!”

"ஆ! தாங்கள் மகாமண்டலேசுவரரைப் பற்றிப் பேச்செடுத்ததும் தான் எனக்கு நினைவு வருகிறது; இப்போது அரண்மனையின் எல்லா அரசியல் காரியங்களும் அவர் பொறுப்பில்தான் நடக்கின்றன. அதங்கோட்டாசிரியர் பவழக்கனிவாயர் எல்லோரும் ஊருக்குப் போய்விட்டார்கள். மகாராணியாருடைய நினைவுகளெல்லாம் சமயத் தத்துவங்களில் திரும்பியிருக்கின்றன. கூற்றத் தலைவர்கள் இருந்தாலாவது ஏதாவது கேள்வி கேட்டு அவர் மண்டையில் குட்டிக் கொண்டே யிருப்பார்கள். அவர்களும் திரும்பி வந்து விட்டனர். கரவந்தபுரத்துக்குச் செய்தி அனுப்புவது, வடதிசைப்போர் நிலவரங்களைக் கண்காணிப்பது எல்லாம் மகாமண்டலேசுவரரே பார்த்துச் செய்கிறார்”