பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/495

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

‘28. ஒப்புரவு மொழி மாறா ஒலை’[1]

காய்ந்த மரத்தில் நான்கு புறத்திலிருந்தும் கல்லெறி விழும் என்பார்கள். பழுத்த மரமாக இருந்து விட்டாலோ இன்னும் அதிகமான துன்பம்தான். எதற்கும் அடங்காத அறிவின் கூர்மையை வைத்துக்கொண்டு வாழ்கிறவர்கள் எவ்வளவோ எதிரிகளை உண்டாக்கிக் கொள்ளவும் தயாராகத்தான் இருக்கவேண்டும். எட்ட முடியாத உயரத்தில் புரிந்து கொள்ள முடியாத சாமர்த்தியத்தோடு நெஞ்சின் பலத்தால் நிமிர்ந்து நிற்பவர்களுக்குச் சுற்றியுள்ளவர்களின் பகையும் வெறுப்பும் கிடைக்கத்தான் செய்யும்.

பொருட்செறிவுள்ள செழுமையான சொற்களால் உட்பொருள் நயம் பொருந்த ஒரு மகாகவி காவியம் ஒன்று எழுதியிருந்தால் அதைப் புரிந்து கொள்ளத் தகுதியற்றவர்களும், புரிந்து கொள்ள முடியாதவர்களும் காரணமின்றி அதன்மேல் வெறுப்படைவது போல் தென்பாண்டி நாட்டின் மகா மண்டலேசுவரர் மேல் சிலருக்கு வெறுப்பு உண்டாகியிருந்தது.

“மக்களின் மனப் பண்பு தாழ்ந்து கீழ்த்தரமாகப் போய் விட்டால் உயர்வும், தரமும் உள்ள எல்லாப் பொருள்களின் மேலும் ஏதோ ஒரு வகை வெறுப்பு வந்துவிடுகிறது. மண்ணில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் மனத்தில் மண்படாமல் வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் பேதமையின் காரணமாகப் பெரும்பாலோர் மனத்தையும் மண்ணில் புரட்டிக் கொண்டு விடுகிறார்கள்” என்று கோட்டாற்றுச் சமணப் பண்டிதர் அடிக்கடி மகாராணியிடம் சொல்லுவார்.


  1. இந்தக் காலத்தில் அரசாங்கத்தின் மேல் கொண்டு வருகிற நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மாதிரி அந்த நாளில் தென்பாண்டி நாட்டில் அரசர்கள் மீதோ, பொறுப்பு ஒதுக்கப்பட்ட மகாமண்டலேசுவரர் போன்றவர் மீதோ கொண்டு வரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஒப்புரவு மொழி மாறா ஒலை என்று பெயர் கூற்றத் தலைவர்கள் ஒன்று கூடி ஒப்புரவு மொழி மாறா ஒலை கொண்டுவருவர். Ref:No73. Olai document of Kollam 878 T.A.S. Vol.V.P215