பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

பாண்டிமாதேவி / முதல் பாகம்


“அருமைக் குழந்தைகளே ! உங்களுக்கு எல்லா மங்கலங்களும் உண்டாகட்டும். அறிவும், திருவும் மிக்க நல்ல நாயகர்கள் வாய்க்கட்டும்!”

மகாராணி இப்படி அவர்களை வாழ்த்திக்கொண்டிருந்த போது நிலா முற்றத்தின் தென் பக்கம் மதிற்கவருக்குக் கீழே இருந்த அரண்மனை நந்தவனத்திலிருந்து ஒரு குரூரமான கூப்பாடு எழுந்தது. அதை யடுத்துச் சடசடவென்று ஒரு பெரிய மரக்கிளை முறிந்து விழும் ஓசை கேட்டது. ஆந்தைகள் அலறின. திடு திடு வென ஆட்கள் ஒடும் காலடி ஓசையும், இனம் புரிந்து கொள்ள முடியாத வேறு சில சத்தங்களும் அரண்மனை நந்தவனத்திலிருந்து கிளம்பின. நந்தவனத்தில் மூலைக்கொன்றாகத் தீப்பந்தங்கள் மின்னிக் கொண்டிருந்தன. நிலாமுற்றத்திலிருந்த மகாராணி உட்பட எல்லோரும் திடுக்கிட்டு எழுந்தார்கள். என்ன? என்ன? என்ற கேள்வி ஒவ்வொருவர் வாயிலிருந்தும் முந்தி எழுந்தது. எல்லோரும் நந்நவனத்தின் பக்கமாக மிரண்ட பார்வையால் திரும்பிப் பார்த்தனர். அங்கே தீப்பந்தங்களோடு வீரர்கள் ஒடுவதும், ‘பிடி விடாதே!’ என்ற கூப்பாடுகளும் கண்டு அவர்கள் திகைத்தனர்.


6. யார் இந்தத் துறவி?

தோணித் துறையிலிருந்து இரவின் அகால நேரத்தில் புறப்பட்ட அந்தப் படகு பறளியாற்றைக் கடந்து கொண்டிருந்தது. ஆற்றில் வெள்ளத்தின் வேகமும், சுழிப்பும் மிகுதியாக இருந்ததால் அம்பலவன் வேளான் படகை மெல்லச் செலுத்திக் கொண்டு போனான்.

படகில் சென்று கொண்டிருந்தபோது மகா மண்டலேசுவரர் தளபதி வல்லாளதேவனிடம் கலகலப்பாகப் பேசினார். அவருடைய திருக்குமரி குழல்வாய்மொழி நாச்சியாரும் சிரித்துக் கொண்டே வேடிக்கையாகவும், கலகலப்பாகவும் பேசினாள். படகோட்டி அம்பலவன்