பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/504

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

502

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


காப்பாற்றப்படுகின்றோமோ அந்த ஒரு மனிதரை அந்தப் பதவியிலிருந்து இழக்க எனக்கு விருப்பமில்லை.”

“அப்படியானால் தென்பாண்டி நாட்டு மகாராணியார் எங்களையெல்லாம் இழந்துவிடத்தான் நேரும்.”

“நான் உங்களை இழந்துவிடுவதுதான் நல்லதென்றோ அல்லது நீங்கள் என்னை இழந்துவிடுவதுதான் உங்களுக்கு நல்லதென்றோ தோன்றினால் அப்படியே வைத்துக் கொள்ளுங்களேன்!” என்றார் மகாராணி.

“எங்கள் ஒத்துழையாமையின் விளைவு மிகவும் பயங்கரமாக இருக்குமென்பதை இப்போதே கூறிக்கொள்ள விரும்புகிறேன்.”

“அதற்கு நான் என்ன செய்யட்டும்! நீங்களே உங்களைப் பயங்கரமாக்கிக் கொள்கிறீர்கள் ?”

“சரி! நான் வருகிறேன்.” கிழட்டுப் புலி பின்நோக்கிப் பாய்வதுபோல் விறுட்டென்று கோபமாகத் திரும்பினார் கழற்கால் மாறனார்.

“எங்கே அவ்வளவு அவசரம்? கொஞ்சம் இருங்கள்; போகலாம்” என்று சிரித்துக்கொண்டே அப்போதுதான் உள்ளே நுழைந்த மகாமண்டலேசுவரரைப் பார்த்தபோது பூதம் கண்ட சிறு பிள்ளைபோல் நடுங்கினார் கழற்கால் மாறனார்.


29. கொடும்பாளுர்க் கழுமரத்தில் கோட்டாற்றான் குருதி

கொடும்பாளுர்க் கோட்டைக்குள் அரண்மனைக் கூத்தரங்கத்தில் ஆடிக்கொண்டிருந்த தேவராட்டி பயங்கரமாக அலறிக்கொண்டே தன் கையிலிருந்த திரிசூலத்தை மான்கண் சாளரத்தை நோக்கிச் சுழற்றி எறிந்தபோது அந்தச் சாளரத்துக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருந்தவனைப் பிடிப்பதற்காக ஐந்து பேருடைய பத்துக் கால்கள் விரைந்து சென்றன.