பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/539

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

537


மீண்டும் அவளைத் தூண்டிக் கேட்டார். அவள் தனக்குத் தெரியாதென்று கூறிவிட்டாள்.


34. தளபதி திடுக்கிட்டான்

இடையாற்றுமங்கலத்து நிலவறையிலிருந்து ஆயுதங்களை யாரோ கடத்திக்கொண்டு போய்விட்டதாகச் செய்தி தெரிவிப்பதற்கு அரண்மனைக்கு வந்த அம் பலவன் வேளானை நிதானமாகத் தங்கச் செய்து மறுநாள் காலைவரை நிறுத்தி வைத்து விவரமாகச் சொல்லும்படி கேட்டார் மகாமண்டலேசுவரர். இத்தகைய சந்தர்ப்பங்களில் ஆழமாகச் சிந்திப்பவருக்கே உரிய இயல்பான நிதானம் அவருக்கு வந்துவிடும்.

“அப்பா! மற்றவர்கள் அரைக்கால் நாழிகையில் உண்டு முடித்துவிடக்கூடிய ஒர் உணவுப் பொருளை, நீங்கள் சாப்பிட்டால் அரை நாழிகை உட்கார்ந்து நிதானமாக மென்று தின்கிறீர்களே?” என்று அவருக்கு உணவு பரிமாறும் போதெல்லாம் அவரது செல்வக் குமாரி குழல்வாய்மொழி அவரைக் கேட்பாள். அவர் அப்போது தம் புதல்வியை நிமிர்ந்து பார்த்துக்கொண்டே ஒருவிதமாகச் சிரித்தவாறு மறுமொழி கூறுவார்:

“குழல்வாய்மொழி! உணவை மட்டுமல்ல; காதிலும், கண்ணிலும், மனத்திலும் படுகிற விஷயங்களைக்கூட இப்படி மென்று தின்று உண்டால்தான் சீரணமாகிறது எனக்கு. அறிவும் சிந்தனையும் உள்ளவர்களுக்கு இந்த நிதானம் ஒரு பலவீனம்தான், அம்மா! ஆனால் எங்களுடைய ஒரே பலமும் இந்த நிதானத்தில்தான் அடங்கியிருக்கிறது.”

அடுத்தடுத்துத் தொடர்ந்து இடையாற்றுமங்கலத்தில் கொள்ளையும், திருட்டும் நடப்பது பரபரப்பூட்டக் கூடிய தொரு செய்தியானாலும் அவர் பரபரப்படைகிற மாதிரி வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.