பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

பாண்டிமாதேவி / முதல் பாகம்


“தளபதி! வழியைப் பார்த்து நடந்து வா! மழை பெய்த ஈரம், வழுக்கிவிடப்போகிறது. எங்கேயோ பார்த்துக்கொண்டு நடக்கிறாயே?’ என்று அவர் குறிப்பாகத் தன் செயலைக் கண்டித்தபோது தான் திரும்பிப் பார்ப்பதை வல்லாளதேவன் நிறுத்திக் கொண்டான். அப்போது மகாமண்டலேசுவரரும் தானும் தனியாக இருப்பதால் அந்தத் துறவியைப் பற்றி அவரிடம் விசாரிப்பது தவறில்லை என்று அவனுக்குத் தோன்றியது.

“மகா மண்டலேசுவரரிடம் அடியேன் ஒரு சந்தேகம் கேட்கலாமோ?” என்றான்.

முன்னால் ‘விறுவிறு’ வென்று விரைந்து நடந்து கொண்டிருந்த இடையாற்று மங்கலம் நம்பி நின்று அவனைத் திரும்பிப் பார்த்தார். இமையாமல் அவர் பார்த்த அந்தப் பார்வையில் ஆத்திரமா? திகைப்பா? வெறுப்பா? கோபமா?எது நிறைந்திருந்தது என்பதை வல்லாளதேவனால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

“சந்தேகமா! என்ன சந்தேகம்?” நிதானமான குரலில் பதற்றமில்லாமல் வெளி வந்தது அவருடைய கேள்வி.

மகா மண்டலேசுவரர் தன்னைத் திரும்பிப் பார்த்த விதத்தையும் கேட்ட கேள்வியையும் பார்த்து ஒரு கணம் அப்படியே அயர்ந்துபோய் நின்றுவிட்டான், வீரத்தளபதி. தான் கேட்க நினைத்ததைக் கேட்காமலே இருந்து விடலாமா என்று ஒருவிதத் தயக்கம்கூட அவனுக்கு உண்டாயிற்று. அறிவிலும், அநுபவத்திலும், சூழ்ச்சியிலும், எதையும் ஆளும் திறமையிலும் மலை போல் உயர்ந்த மகா மண்டலேசுவரரிடம் எதையும் மறைக்க முடியாது. ஒவ்வொரு சொல்லிலும், ஒவ்வொரு பார்வையிலும், ஒவ்வொரு அசைவிலும் மனத்தின் ஆழத்தில் பதுங்கியிருக்கும் அதற்கு மூலமான எண்ணத்தை ஊடுருவி அறியக்கூடியவர் இடையாற்று மங்கலம் நம்பி. எனவே கேட்க நினைத்ததை மறைக்காமல் கேட்டு விடுவதென்று உறுதி செய்து கொண்டு “நம்மோடு படகில் வந்தாரே, அந்தத் துறவி...” என்று தொடங்கி, அவன் தன்