பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/546

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

544

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


அனுப்புபவர் போல்தான் பேசினார்.அவர். அந்தச் சூழ்நிலையில் அப்படியொன்றும் தெரியாததுபோல் நடந்து கொள்வதுதான் நல்லதென்று அவருக்குப் பட்டது. அரசியல் வாழ்வில் ஒன்றும் தெரியாதவன் எல்லாம் தெரிந்ததுபோல் நடித்தால் ஈரம் புலராத பச்சை மண்குடத்தில் வைத்த தண்ணிர்போல் பலவீனங்கள் விரைவில் வெளிப்பட்டுத் தோற்றுவிடுவான். எல்லாம் தெரிந்தவன் ஒன்றும் தெரியாததுபோல் நடித்தால் இறுதிவரை வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்டு விடுவான். இந்தத் தத்துவத்தில் மகாமண்டலேசுவரருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. எண்ணங்களையும் அனுபவங்களையும் நான்கு மடங்கு தற்பெருமையோடு கலந்து காண்பவர்களிடமெல்லாம் அளந்து கொண்டு திரியும் சாமானிய மனித ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டவர்.

ஆபத்துதவிகள் தலைவன் கையில் அவர் அந்தப் பட்டுத் துணியைக் கொடுத்தபோது ஒன்றுமே தெரியாதவர்போல் சிரித்துக்கொண்டு கொடுத்தார். ஆனால் அவனோ அதிர்ச்சியடைந்து கூனிக் குறுகி நடுங்கி அதை வாங்கிக் கொண்டு விடைபெற்றுச் சென்றான். பகைவர்களிடமும் அநாகரிகமாகப் பகைத்துக்கொள்ளும் பழக்கம் அவருக்கு இல்லை. யார் யாரெல்லாம் பொறாமையால் தமக்கே குழிபறித்துக் கொண்டிருப்பதாக அவர் உணர்கிறாரோ, அவர்களிடம்கூட நாகரிகமாக நடந்துகொள்ளும் பண்பை அறிவு அவருக்குக் கற்பித்திருந்தது. பொன்மனைக் கூற்றத்துக் கழற்கால் மாறனார் ஒப்புரவு மொழி மாறா ஒலையோடு வந்ததை அறிந்தபோதுகூட நாகரிகமாகவே நடந்து கொண்டார் அவர். தன் கழுத்தை அறுக்க வாளை ஓங்கி வருபவனிடம்கூட “போர் இலக்கணப்படி வாளை ஓங்க வேண்டிய முறை இது” என்று முறையைச் சொல்லிக் கொடுத்துவிட்டு அதன்பின் எதிர்ப்பதற்குத் தயாராகும் அறிவின் நாகரிகம் அது! வாளின் கூர்மைக்கு இருப்பதைக் காட்டிலும் அதிக ஆற்றல் அந்த நாகரிகத்துக்கு உண்டு!