பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

53


கேள்வியைக் கேட்டு முடிப்பதற்குள்ளேயே அவர் இடைமறித்துப் பதில் சொல்லத் தொடங்கி விட்டார்:

“அவர் இன்னாரென்று அறிவதற்காகப் படகு புறப்பட்ட போதிலிருந்து நீ துடிதுடித்துக் கொண்டிருப்பது எனக்குத் தெரியும், வல்லாளா ! அவரை வாய் திறந்து பேச வைப்பதற்காக நீ செய்த சாகஸங்களை யெல்லாம் பார்த்து உள்ளுறச் சிரித்துக் கொண்டுதான் வந்தேன் நான். அவரைப் பற்றி நீ கட்டாயம் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இப்போது வேண்டாம், அதற்கொரு சமயம் வரும்” என்று சொல்லி விட்டுக் குறும்புத்தனமானதொரு சிரிப்பை இதழ்களில் மலரச் செய்தார் இடையாற்று மங்கலம் நம்பி.

தன் கேள்விக்கு விடை சொல்லாமல் அவர் சாமர்த்தியமாக அதை மறுத்த விதம் தளபதியை அதிர்ச்சியடையச் செய்தது. “வல்லாளதேவா! நீ வந்திருக்கிற நேரத்தையும் அவசரத்தையும் பார்த்தால் மிக மிக இன்றியமையாத காரியமாகத்தான் வந்திருப்பாய் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்தத் துறவியைப்பற்றி விசாரித்து உன் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்காதே. வந்த காரியத்தைப் பேசுவோம், வா!” என்று சொல்லிக் கொண்டே மாளிகையின் அந்தரங்க அறை வாசலில் வந்து நின்றார் மகாமண்டலேசுவரர்.

அங்கிருந்த சேவகன் ஒருவன் ஓடி வந்து அந்தரங்க அறையின் மணிகள் பொருத்தப்பட்ட கதவுகளைத் திறந்து விட்டான். கதவுகளில் தொங்கிய மணிகள் அமைதியான இரவில் கலகலவென்று ஒலித்தன. உள்ளே எரிந்து கொண்டிருந்த தீபங்களைத் தூண்டி விட்டான். தூய கலசங்களிலிருந்த அனலை ஊதிக் கனியச் செய்து அதில் அகில் பொடியைத் துறவினான். தீபங்களின் ஒளியும், தூபங்களின் நறுமணமுமாக அற்புதச் சோபையுடன் விளங்கிய அந்த அறைக்குள் இருவரும் நுழைந்தவுடன் சேவகன் வெளிப்புறமாக வந்து நின்று கொண்டு கதவுகளை இழுத்துச் சாத்தினான். மறுபடியும் ஒரே சமயத்தில் இரு கதவுகளிலும்