பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/558

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

556

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


காரியங்களைச் சொல்கிறேன். தென்பாண்டி நாடு முழுவதும் பரவலாக அவர்மேல் ஒருவிதமான அதிருப்தி உண்டாகும்படி செய்யவேண்டும். பாண்டிய மரபின் அரசுரிமைப் பொருள்கள் காணாமல் போனதற்கு மகாமண்டலேசுவரருடைய கவனக் குறைவுதான் காரணமென்று எல்லோரும் நினைக்கும்படி செய்யவேண்டும். இளவரசன் இராசசிம்மன் நாட்டுக்கு வந்து மகாராணியாரைச் சந்திக்கவிடாமல் அவனை எங்கோ கடல் கடந்து போகும்படி துரத்தியிருப்பவரும் அவர் தானென்று செய்தியைத் திரித்துப் பரப்பவேண்டும். அவருடைய கவனக்குறைவால்தான் கொற்கையில் குழப்பம் விளைந்தது, அவருடைய கவனக் குறைவால்தான் பகைவர் படையெடுப்பு நிகழப்போகிறது, அவருடைய கவனக் குறைவால்தான் மகாராணியின் மேல் யாரோ வேலெறிந்து கொல்ல முயன்றார்கள் என்று எல்லாச் செய்திகளையும் அவர்மேல் அதிருப்தி உண்டாக்குவதற்கு ஏற்ற விதத்தில் நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். போர் ஏற்பட்டு அதற்காகப் படை வீரர்கள் திரட்டுவதற்கு நம்முடைய கூற்றங்களுக்கு மகாமண்டலேசுவரரின் பிரதிநிதிகளாக எவரேனும் வந்தால், படைவீரர்களை அவர்களோடு சேரவிடாமல் நாம் தடுக்க வேண்டும். இவ்வளவையும் செய்வதற்கு உரிய துணிவு நமக்கு ஏற்பட வேண்டும். அந்தத் துணிவு எனக்கு இருக்கிறது. உங்களுக்கும் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.”

“மாறனாரே! எங்களுக்கு அந்தத் துணிவு இதுவரையில் ஏற்படவில்லை. இப்போது நீங்கள் வற்புறுத்திச் சொல்கிறீர்கள். அதனால் நாங்களும் அந்தத் துணிவை ஏற்படுத்திக் கொள்கிறோம். போராடத் துணிந்த பின் தயங்கிக் கொண்டிருக்க முடியாதல்லவா?” என்று நிதானமாக மறுமொழி கூறினார் பரிமேலுவந்த பெருமாள்.

“முடிந்தால் உங்களில் யாராவது ஒருவர் தளபதி வல்லாள தேவனையும் இரகசியமாகச் சந்தித்துப் பேசிப் பாருங்கள். அவனும் மகாமண்டலேசுவரரை எதிர்க்கும் ஒரு காரியத்திலாவது நம்மோடு சேருவானா, இல்லையா என்பது