பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/563

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

561


எண்ணுவதற்கு ஒன்றும் மீதமில்லை. நாளைய தினம்தான் எனக்குத் தெரியாதது. என் கற்பனைகளுக்கு இடமளிப்பது. என் நினைவுகளைத் தாங்கிக்கொண்டு இன்பம் தருவது. நான் எப்படி அதை நினையாமல் இருக்கமுடியும்?”

இந்தக் கேள்விக்கு அவர் பதில் சொல்லாமல் சிரித்தார். சிறிது நேரம் மெளனமாக இருந்தார். பின்பு விடைபெற்றுக் கொண்டு உடன் வந்தவரோடு திரும்பிப் போய்விட்டார். அந்தச் சில விநாடிகளில் இன்னதென்று புரியாத எதோ ஒரு பேருண்மையைத் தனக்குத் தெரியாமல், தனக்கு விளங்காமல், தானறிந்துகொள்ள முடியாமல் தன் மனத்தில் அவர் பதித்துவிட்டுப் போய்விட்டது போல் மகாராணிக்கு ஒர் உணர்வு ஏற்பட்டு வளர்ந்தது. -

இருட்டி நெடுநேரமாகி நந்தவனத்திலிருந்து திரும்பி இரவு உணவு முடித்துப் படுத்துக்கொண்டபின்னும் அந்தச் சிந்தனை மகாராணியை விட்டு நீங்க மறுத்தது. முன்னும் பின்னும் தொடர்பற்ற, பல சிந்தனைகள், பல முகங்கள் பலருடைய பழக்கங்கள் எல்லாம் அவருக்கு நினைவு வந்தன. கழற்கால் மாறனாரின் பதவி ஆசை, மகாமண்டலேசுவரரின் கம்பீரம், சுசீந்திரத்தில் சந்தித்த திருவாட்டாற்றுச் சோழியப் பெண்ணின் தாய்மை கனிந்த முகம், காந்தளூர் மணியம் பலத்தில் அந்த முதுபெரும் புலவர் மாணவர்களுக்குக் கூறிய அறிவுரை-எல்லாம் அவர் நினைவில் தோன்றி மறைந்தன. நினைவுகளின் வெள்ளத்தில் அவர் மனம் நீந்தத் தொடங்கியது. - -

நந்தவனத்துக் குளத்தில் பார்த்த செவ்வல்லிப்பூ சிறிது சிறிதாக விரிந்து, வடிவு பெருகி ஓர் அழகிய ஆண் குழந்தையின் முகமாக மாறிச் சிரிக்கிறது. சிரித்துக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக மாறி வளர்ந்து அது ஒரு இளைஞனின் முகமாக விரிவடைகிறது. அந்த முகத்துக்குக் கீழே கைகளும், கால்களும், உடம்பும் உண்டாகி, ஒரு வாலிபன் எழுந்து நிற்கிறான். அந்த வாலிபன் வேறு யாருமில்லை; குமார பாண்டியன் இராசசிம்மன்தான். பா. தே. 36 .