பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/564

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

562

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


‘அம்மா ! உங்கள் எண் ணங்களை நான் நிறைவேற்றுவேனா, மாட்டேனா என்று கவலைப்படாதீர்கள். என்னுடைய வலிமை வாய்ந்த கைகள் அவற்றை நிறைவேற்றுவதற்காகவே இருக்கின்றன” என்று இராசசிம்மன் அருகில் வந்து கைகூப்பி வணங்கிக்கொண்டே சொல்லுகிறான்.

“குழந்தாய்! நான் அவநம்பிக்கையடைந்துவிடக் கூடா தென்பதற்காக நீ இப்படிக் கூறுகிறாய். நாளைக்கு நடக்கப் போவதைப் பற்றிச் சொல்ல உன்னால் எப்படி அப்பா முடியும்? அது உன் நினைப்பைப்போல் இல்லாமலும் போகலாம். உனக்குப் பல பொறுப்புக்கள் இருக்கின்றன. நீயோ ஒரு பொறுப்பும் நினைவில்லாமல் மனம்போன போக்கில் திரிந்து கொண்டிருக்கிறாய். முதலில் நீ தாய்க்கு மகனாக இருப்பதற்குத் தெரிந்துகொள்ள வேண்டும். பின்பு நாட்டுக்கு அரசனாக இருப்பதற்குத் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் பின் ஒரு பெண்ணுக்கு நாயகனாக இருப்பதற்குத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கெல்லாம் அப்பால் குழந்தைகளுக்குத் தந்தையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். பிறந்தும் ஆண்டும் பெற்றும் பெறுவித்தும் முடிவதுதான் வாழ்க்கை. தாயைக்கூடச் சந்திக்காமல் சுற்றிக்கொண்டிருக்கும் நீ பொறுப்புக்களை உணர்ந்து கொள்ளுவது எப்போது? பொறுப்புக்களை உணர்வதற்கே தெம்பில்லாத நீ அவற்றைச் சுமப்பது என்றைக்கோ ? . மகாமண்டலேசுவரர் நல்லெண்ணத்துடன் உன்னை இடையாற்றுமங்கலத்துக்கு அழைத்து வந்து இரகசியமாகத் தங்க வைத்தால், நீ அவர் கண்களிலேயே மண்ணைத் தூவிவிட்டு அரசுரிமைப் பொருள்களைக் கடத்திக் கொண்டுபோய் விட்டாய். இலங்கை இலங்கை என்று நினைத்தபோதெல்லாம் அங்கே ஓடிவிடுகிறாய். அப்படி உனக்கு என்னதான் வைத்திருக்கிறதோ அங்கே காசிபமன்னன் உனக்கு வேண்டியவனாக இருக்கலாம். அதற்காக எப்போதும் அவன் நிழலிலேயே போய் ஒதுங்கலாமா? முயற்சியும் ஊக்கமும் உள்ள ஆண் மகனுக்குப் பிறருடைய நிழலில் போய்