பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

55


வாளேந்தியும், ஒரு பெரும் படையினை முன்னின்று நடத்தி வெற்றி பெறும் திறன் அவனிடம் இருந்தது. ஆனால் புறத்தாய நாட்டு மகாமண்டலேசுவரர் செய்ய நினைக்கும் செயல்களையும் எண்ணங்களையும் துணிந்து முன்னின்று ஆராயும் இதயத் திடம் அவனுக்கு இல்லை. அந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவன் மனம் இந்த நொடிவரை பலவீனம் என்ற எல்லைக்கோட்டை மீறி அப்பாற் சென்றதே இல்லை. இதற்குப் பல காரணங்கள் உண்டு. மகாமண்டலேசுவரரின் முகத்தைப் பார்த்துக் கொண்டு அவருக்கு எதிரே உட்கார்ந்து பேசும் போது இதயத்தை மறைத்து எந்தப் பொய்யையும் பேசமுடியாது. உயர்ந்தோங்கி, வானமண்டலத்தை அணைந்து நிற்கும் பிரமாண்டமான ஒரு மலைச்சிகரத்தைக் கண்ணெதிரே பார்க்கிற உணர்ச்சி உண்டாகும் அந்த மனிதரின் முகத்தைப் பார்க்கும் போது. ஆகவே எவ்வளவுதான் மறைக்க முயன்றாலும் உண்மை தான் வாயில் வரும். தன்னிடம் யார் பேசிக் கொண்டிருந்தாலும் வேறெங்காவது பராக்குப் பார்த்துக் கொண்டு அந்தப் பேச்சைக் கேட்கும் வழக்கம் அவரிடம் கிடையவே கிடையாது. பேசுகிறவனின் முகத்தையும் அதிலுள்ள கண்களையும் பார்த்துக் கொண்டே தான் பேச்சைக் கேட்பார். அந்தப் பார்வை பேசுகிறவனின் மனத்தில் புதைந்து கொள்ள முயலுகிற உண்மைகளையெல்லாம் குத்தி இழுத்து வெளியே கொண்டு வந்து விடும். அவ்வளவு கூர்மை அதற்கு!

அவசியம் ஏற்பட்டாலொழிய இடையில் குறுக்கிட்டு எதையும் கேள்வி கேட்காமல் எதிராளியின் பேச்சைக் கூர்ந்து கேட்டுக் கொண்டே போவார்.

அவரிடம் இப்படிப் பலமுறை அநுபவப்பட்டிருந்த தளபதி வல்லாளதேவன் அன்று அந்தரங்க அறைக்குள் அவரோடு நுழைந்த போது மிகவும் முன்னெச்சரிக்கையுடன் அவசியமானவற்றைத் தவிர வேறெதையும் பேசக் கூடாதென்று மனத்தை உறுதிப்படுத்திக் கொண்டு தான் நுழைந்தான். கன்னியாகுமரியில் கைப்பற்றிய ஒலையைப் பற்றி அவரிடம் வாய் தவறி உளறி விடக்கூடாதென்று தீர்மானித்துக் கொண்டான் வல்லாளதேவன்.