பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/570

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

568

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்

“ஐயோ! அணைந்துவிட்டதா? நான் பார்க்கவே இல்லையே?.” என்று பதறி, அதை ஏற்றுவதற்காக ஓடினாள் வண்ணமகள்.

பிரமை பிடித்தவர்போல் சூனியத்தை வெறித்து நோக்கியபடி மறுபடியும் கட்டிலிலேயே உட்கார்ந்து கொண்டார் மகாராணி.

“இரவில் எண்ணங்கள் உற்சாகமாக, நம்பிக்கையளிப் பவையாக, விரும்பத்தக்கவையாக இருந்தன. பகல் விடிந்ததுமே ஒளியின்றிப் புகைகிறது” என்று மெல்ல தமக்குத் தாமே சொல்லிக்கொண்டார் அவர். சாளரத்தின் வழியே நுழைந்த ஒளிக்கதிர்கள் அவருடைய நெற்றியில் படிந்து மினுமினுப்புக் காட்டின.

அன்றைய நாளின் விடிவு காலத்தின் வேகமான அலைகளில் தன்னை வேறொரு திசையில் இழுப்பதற்காக விடிந்ததுபோல் ஏதோ மனத்தில் அவருக்கு ஒரு குழப்பம் எழுந்தது. அப்போது கோட்டாற்றுப் பண்டிதர் பதில் பேசாமல் சிரித்து விட்டுப் போன அந்தச் சிரிப்பு அவருக்கு நினைவு வந்தது. முன்பொரு சமயம் அவர் ஒலையில் எழுதிக்கொடுத்துவிட்டுப்போன பாட்டு நினைவு வந்தது.

“மகாராணி! வெயில் ஏறி வெப்பம் அதிகமாகிக் கொண்டே போகிறதே” என்று நீராடுவதற்கு நினைப்பூட்டும் நோக்கத்தோடு ஒரு பணிப்பெண் கூறினாள்.

“ஆமாம்! வெப்பம் அதிமாகிக் கொண்டுதான் போகிறது” என்று அதே வார்த்தைகளை வேறு பொருள் தொனிக்கத் திருப்பிச் சொல்லிக்கொண்டே எழுந்திருந்தார் மகாராணி வானவன்மாதேவி.

இரண்டாம் பாகம் முற்றிற்று