பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

பாண்டிமாதேவி / முதல் பாகம்


ஆனால், இடையாற்று மங்கலம் நம்பியிடம் பேசத் தொடங்கி விட்டதும் தளபதி வல்லாளதேவன் எதை எதை மகா மண்டலேசுவரரிடம் சொல்லக்கூடாதென்று நினைத்துக் கொண்டிருந்தானோ, அவையெல்லாம் அவனையறியாமலே அவன் வாயில் வந்து விட்டன. அவர்கள் உட்கார்ந்திருந்த அந்தரங்க அறை ஒளி மயமாக இருந்தது. தூபப் புகையின் நறுமணம்! அன்னக் கொடி விளக்குகளின் ஒளி! நாற்புறமும் சுவர்களில் அழகான ஒவியங்கள்! அறை முழுவதும் கட்டித் தொங்க விடப்பட்டிருந்த மல்லிகைப் பூச்சரங்கள்! பூ மணமும் அகிற்புகையும், தீப ஒளியும், எதிரே நிமிர்ந்து உட்கார்ந்து தன்னையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் இடையாற்று மங்கலம் நம்பியின் பார்வையும் ஒன்று சேர்ந்து தளபதியை என்னவோ செய்தன!

புறத்தாய நாட்டுக் கோட்டையிலிருந்து மகாராணியார் கன்னியாகுமரிக்குப் புறப்பட்டது, பாறையிடுக்கில் ஒற்றர்களைச் சந்தித்தது, தரிசனத்தின் போது மகாராணிக்கு ஏற்பட்ட ஆபத்து, மறு நாள் நாஞ்சில் நாட்டு மகாசபையைக் கூட்டுமாறு மகாராணி ஆணையிட்டிருப்பது ஆகிய எல்லா விஷயங்களையும் மகாமண்டலேசுவரரிடம் அவன் கூறினான். ஒற்றர்களிடமிருந்து கைப்பற்றிய ஒலையைப் பற்றி மட்டும் அவன் சொல்லவே இல்லை.

எல்லாவற்றையும் கேட்டு விட்டு மகாமண்டலேசுவரர் சிரித்தார். “தளபதி ! எல்லாம் சரிதான். உன்னுடைய இடுப்பிலிருக்கும் அந்த ஒலையில் என்ன எழுதியிருக்கிறதென்று எனக்குத் தெரியும். ஆனாலும் அதை என்னிடம் எடுத்துக் காட்டி விடுவது தான் முறை!” என்றார்.

இதைக் கேட்டதும் வல்லாளதேவன் வெலவெலத்துப் போனான். அவன் உடல் நடுங்கியது. மகாமண்டலேசுவரர் அவனை நோக்கி வெற்றிப் புன்னகை பூத்தார். அதே சமயம் கதவுகளின் மணிகள் மெல்ல ஒலித்தன.