பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/580

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

578

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


விசிதபுரத்துக்குக் குறுக்கு வழியாக அழைத்துப் போய்விட வேண்டும் என்று மனத்துக்குள் திட்டமிட்டிருந்தார் சக்க சேனாபதி. விசிதபுரத்தில் ஆயிரம் பிட்சுக்களை உறுப்பினர் களாகக் கொண்ட மகாபெளத்த சங்கம் ஒன்று உண்டு. அந்தச் சங்கத்தின் தலைவர் தத்துவசேன அடிகளைச் சக்க சேனாபதிக்கு நன்கு தெரியும். அங்கே தங்கிவிட்டு விடிந்ததும் அனுராதபுரப் பயணத்தைத் தொடரலாமென்பது அவர் திட்டமாயிருந்தது. ஆனால் அந்தத் திட்டப்படி எதுவும் நடைபெறவில்லை. முற்றிலும் வேறான பயங்கர நிகழ்ச்சி ஒன்று நடந்தது. -

காட்டுச்சாலையும் விசிதபுரத்துச் சாலையும் சந்திக்கிற இடம் வந்தபோது இடிமுழக்கம்போல் யானைகள் பிளிரும் ஒலிகளும், மரக்கிளைகள் முறிகிற சத்தமும் காடே கிடுகிடுக்கும்படி எழுந்தன.

“இளவரசே! குதிரையை நிறுத்துங்கள்...” என்று கூச்சலிட்டார் சக்கசேனாபதி. குதிரைகள் நின்றன. எதிரே வழி மறிக்கிறார்போல் பத்திருபது கருங்குன்றுகள் நீண்ட தந்தங்களை ஆட்டிக்கொண்டு நின்றன. அந்த யானைகளின் தந்தங்கள் அவ்வளவு இருட்டிலும் பளிச்சென்று தெரிந்தன. சக்கசேனாபதி “பேசாமல் நான் செய்வதுபோல் செய்யுங்கள்” என்று இராசசிம்மனிடம் கூறிவிட்டுக் குதிரைமேல் எழுந்து நின்றார். அப்படி நின்றவுடன் மேலே தாழ்வாக இருந்த ஒரு மரக்கிளை அவர் கைகளுக்கு எட்டியது. அதைப் பற்றிக் கொண்டு மரத்தில் ஏறினார் அவர். இராசசிம்மனும் அதே வழியைப் பின்பற்றி அதே மரத்தில் ஏறினான். யானைகளின் மதம் மரக்கிளைகளைச் சாடிக்கொண்டிருந்தது. “உயிரைப்பற்றி உறுதியாக நம்புவதற்கில்லை. குலதெய்வங்களைத் தியானித்துக் கொள்ளுங்கள்! விதி இருந்தால் பிழைப்போம்” என்று நடுங்கும் குரலில் குமாரபாண்டியனுக்குச் சொன்னார் சக்கசேனாபதி. தங்கள் உயிர்களைப் பற்றி அவர்கள் நம்பிக்கையிழந்துவிட்ட அந்தச் சமயத்தில் விசிதபுரத்துச் சாலையில் ஒரு பெரிய ஆச்சரியம் நிகழ்ந்தது.